Header Ads



அதான் எனும் பாங்கை, கேலி செய்தால் என்ன நடக்கும்..?

Sirajul Hasan

அதான் எனும் தொழுகை அழைப்பை ஒருவர் கேலியும் கிண்டலும் செய்தால் என்ன நடக்கும்?

இந்தக் காலமாக இருந்தால் ஒருவேளை கலவரம் வெடிக்கலாம்.

ஆனால் தொழுகை அழைப்பைக் கேலியும் கிண்டலும் செய்தவருக்கு வெள்ளிக் காசுகளைப் பரிசாய் அளித்து, மக்காவில் பாங்கு சொல்லும் பதவியையும் அளித்தார் ஓர் ஆட்சியாளர்.

யார் அந்த ஆட்சியாளர்? ஆம்..நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்தாம்.

கேலியும் கிண்டலும் செய்தவர் யார்? அபூமஹ்தூரா என்னும் நபித்தோழர். அவர் அப்போது முஸ்லிம் ஆகவில்லை. அவரே கூறுகிறார் கேட்போம்:

“நான் (அபூமஹ்தூரா) சிறு கூட்டத்துடன் பயணம் புறப்பட்டுச் சென்றேன். அப்போது இறைவனின் தூதர் ஹுனைனிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார். தொழுகை நேரம் வந்துவிட்டதால் தொழுகை அழைப்பாளர் பாங்கு சொன்னார்.

நாங்கள் அந்த நேரத்தில் முஸ்லிம் ஆகவில்லை. ஆகவே பாங்கு சொன்னவரின் சப்தத்தைப் போலவே நாங்களும் கூறி அதைக் கேலியும் கிண்டலும் செய்தோம்.

எங்கள் கேலி கிண்டலை இறைத்தூதர் செவியுற்றுவிட்டார். “அந்தக் கூட்டத்தில் அழகிய குரல் உடையவரின் பாங்கு சத்தம் கேட்டேன். அவரை அழைத்துவாருங்கள்” என்றார்.

அது நான்தான் என்பதை அறிந்துகொண்ட இறைத்தூதர், பாங்கு சொல்லும்படிக் கூறினார். சொல்லும் முறையையும் கற்பித்தார்.

பாங்கை நான் முழுமையாகக் கூறிமுடித்தபோது எனக்காகப் பிரார்த்தனை புரிந்து, சில வெள்ளிக்காசுகள் கொண்ட ஒரு பையைத் தந்தார்கள். பிறகு மக்காவிலுள்ள இறை ஆலயத்திற்குச் சென்று பாங்கு கூறு என்றார்கள்.

மக்காவில் இறைத்தூதரின் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த அத்தாப் பின் அஸீத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவருடன் இணைந்து இறைத்தூதர் அவர்களின் ஆணைக்கிணங்க தொழுகைக்கு பாங்கு கூறினேன்.” (ஆதாரம்- நஸாயீ, பாடம்- பாங்கு, நபிமொழி எண்கள் 628, 629)

இந்த நபிமொழிகளில் அபூமஹ்தூரா எந்தக் கட்டத்தில் முஸ்லிமானார் எனும் தகவல் இல்லை. ஆயினும் இறைத்தூதர் அவர்கள், அபூமஹ்தூராவின் கேலி கிண்டல்களைப் பெரிதாய்க் கருதாமல் அவரிடம் இருந்த குரல்வளத்தைச் சரியாக இனம் கண்டு அவருக்கு பாங்கு சொல்லும் பொறுப்பை அளித்தார்.

நபிகளார் நினைத்திருந்தால் “ஆ...பாங்கையே கேலி செய்துவிட்டாயா? என்ன திமிர் உனக்கு” என்று சினந்து கூறி அபூமஹ்தூராவைத் தண்டித்திருக்கலாம்.

ஆனால் இறைத்தூதரோ அந்தத் தோழரிடம் உள்ள குரல்வளத்தைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினார்.

நல்ல தலைவர் என்பவர் மற்றவர்களிடம் உள்ள ஆற்றல்களைக் கண்டறிந்து அதை எப்படி முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. 


No comments

Powered by Blogger.