Header Ads



கல்முனையில் விரைவில், அஷ்ரப் ஞாபகார்த்த மையம் - ஹரீஸ்


இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒரு மைக்கல்லாகத் திகழ்ந்து எங்களை விட்டுப் பிரிந்த மர்ஹும் அஷ்ரப் அவர்கள், எங்களுக்கு விட்டுச்சென்ற அடையாளங்களை எதிர்கால சந்ததியும் அறிந்து கொள்வதற்காய் அவர் அரசியல் பணியாற்றிய கல்முனையில் விரைவில் அஷ்ரப் ஞாபகார்த்த மையம் ஒன்றை நிறுவவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான அல் ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மரணமாகிய 17வது வருட ஞாபகார்த்த நிகழ்வும் கத்தமல் குர்ஆன் மற்றும் துஆ பிராத்தனையும் கல்முனை மசூறா குழுவின் ஏற்பாட்டில் பிரதி அமைச்சரின் கல்முனை அலுவலகத்தில் 2017-09-16 ஆம் திகதி இடம்பெற்றபோதே மேற்படி பிரகடனத்தை வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாக தலைவர் மர்ஹும் அஷ்ரப், கடந்த 2000-09-16 ஆம் திகதி அகால மரணத்தை தழுவியிருந்தார். அன்னார் வாழ்ந்த காலத்தில் அரசியல் அனாதைகளாக இருந்த இலங்கை முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியது மட்டுமல்லாது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் போன்ற உயர் அபிவிருத்திகளை இப்பிராந்தியத்துக்கு கொண்டுவந்தது போன்ற பாரிய அபிவிருத்திகளையும் கொண்டுவந்திருந்தார்.

மர்ஹும் அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை நிறுவியபோது அவரை பலரும் பல்வேறு கோணங்களில் நோக்கினர். அதில் சிங்கள பெரும்பான்மை, அஷ்ரபை தீவிர போக்குடையவராக பார்த்தது. இதன் காரணத்தால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் இருந்த அரசு அவருடைய கட்சியை பதிவு செய்யாமல் பலவருடங்கள் இழுத்தடித்தன. கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக்கூட நடாத்தமுடியாத சூழல் அப்போது நிலவியது. விடுதலை இயக்கங்கள்கூட அவரது இயக்கம் தங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் என்பதை கணிக்கத் தவறினார்கள். இதனால் அவர்களும் தவறான அபிப்பிராயத்துடன் அஷ்ரப் அவர்களை நோக்கினார்கள். இவ்வாறான சூழலில் மறைந்த தலைவர் அவர்கள் எமது பார்வை என்ற கொள்கைப் பிரகடனத்தினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டில் என்ன செய்யப்போகின்றது என்பதை விளக்கினார்கள். அவர்களுடைய பிரகடனமாது நாட்டின் தேசிய ஒருமைப்பாடு சம்மந்தமானதாக இருந்தது. வடகிழக்கு தமிழ் மக்களுடைய போராட்டத்தயும் இழிவு படுத்தாமல் அவர்களது நியாயங்களையும் வலியுறுத்தி அதேவேளை முஸ்லிம் மக்களுடைய அபிலாஷைகளை வென்றெடுக்கின்ற போராட்டமாகவே அவர்களது பயணம் அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.
இன்றைய சூழலில், சிறுபான்மை மக்களுக்கு மர்ஹும் அஷ்ரப் அவர்களின் வழிகாட்டல் மிக முக்கியமானது என்றும் இப்போது நாட்டில் உணரப்படுவதாகவும் தெரிவித்தார். இன்று வடகிழக்குப் பிரச்சினை தொடர்பாக தீர்வின்போது அஷ்ரப் அவர்களின் பிரசன்னம் தமிழ்த் தலைவர்களாலும் உணரப்படுகின்றன என்றும் தேசிய அரசியலிலே தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கும் அஷ்ரப் அவர்களுடைய ராஜதந்திரம் தேவை என உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஸ்தாபித்த காலப்பகுதியில் ஆயுதப் போராட்டத்துக்குள் உள்ளாகவிருந்த முஸ்லிம் இளைஞர்களை ஜனநாயக வழிக்கு கொண்டுவந்த பெருமை அன்னாரையே சாரும் என்றும் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் நிலவரங்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் ஹரீஸ், அரசியல் சீர்திருத்தம் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரான எவ்வித செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்காது என்றும் தெரிவித்தார்.

-எம்.வை.அமீர் -

3 comments:

  1. Honoruoble minister better to build school or cultural centre or sports club.please do what ever people need ful things.may allahguide our country politicians

    ReplyDelete
  2. Ashraff sir desired that kind of work

    ReplyDelete
  3. Ashraff sir desired that kind of work

    ReplyDelete

Powered by Blogger.