Header Ads



இலங்கையராக நாம், வெட்கப்பட்ட நாள்

இலங்­கை­ய­ராகப் பிறந்­த­மைக்­காக நாம் எல்லாம் பெரு­மைப்­பட்ட நாட்கள் கடந்து, இன்று வெட்­கப்­பட வேண்­டிய காலம் வந்­தி­ருப்­பது துர­திஷ்­ட­மா­னது.
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கல்­கிசை பகு­தியில் ஐ.நா. அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் பொறுப்பில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த 32 ரோஹிங்ய அக­தி­க­ளுக்கு எதி­ராக பிக்­குகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் சிலர் தலை­மை­யி­லான குழு­வினர் மேற்­கொண்ட காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான நட­வ­டிக்கை முழு இலங்­கை­ய­ருக்­குமே தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யுள்­ளதைப் போல இவர்கள் மனி­தர்கள் அன்றி மிரு­கங்­க­ளே­யா­வார்கள். மியன்­மா­ரி­லி­லுள்ள மனி­தா­பி­மா­ன­மற்ற பௌத்த பிக்­குகள் மற்றும் இரா­ணு­வத்­தி­னரின் கரங்­களில் சிக்­கி­வி­டா­தி­ருக்க உயிர் தப்பி வந்த இந்த அக­திகள்,  இன்று இலங்­கை­யிலும் இவ்­வா­றான மனி­தா­பி­மா­ன­மற்ற பௌத்த பிக்­கு­களின் அழுத்­தங்­க­ளுக்கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் ஆளா­கி­யி­ருக்­கி­றார்கள்.
இலங்கை விருந்­தோம்­ப­லுக்குப் பெயர் பெற்ற நாடு என்று நாம் இது­வரை கட்­டிக்­காத்து வந்த நற்­பெ­யரை ஒரே நாளில் காற்றில் பறக்­க­விட்ட இந்த பிக்­கு­களின் செயலை பொலி­சாரும் அர­சாங்­கமும் வேடிக்கை பார்த்­த­மைதான் அதை­வி­டவும் கவலை தரு­வ­தாகும். இன்று விசா­ரணை நடத்தப் போவ­தா­கவும் பொலிஸ் குழுக்­களை அமைத்­துள்­ள­தா­கவும் அறி­வித்­தி­ருப்­பது வெறும் கண்­து­டைப்பே அன்றி வேறில்லை. 
உண்­மையில் இந்த விவ­காரம் இந்த நாட்டில் மனி­தா­பி­மா­னத்தை நேசிக்­கின்ற பௌத்த, இந்து, இஸ்­லா­மிய , கிறிஸ்­தவ சம­யங்­களைப் பின்­பற்­று­கின்ற சக­ல­ரை­யுமே அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளதை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­படும் கருத்­துக்கள் உணர்த்தி நிற்­கின்­றன. 
குறிப்­பாக அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர மற்றும் லக்ஸ்மன் கிரி­யெல்ல ஆகியோர் இது தொடர்­பான தமது பலத்த கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ள­துடன் ரோஹிங்யா மக்­களை இலங்­கை­யர்­க­ளா­கிய நாம் நன்­றாக உப­ச­ரிக்க வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.
சிரி­யா­வி­லி­ருந்து வெளி­யே­றிய இலட்சக் கணக்­கான அக­தி­களை உள்­ளீர்க்க முடி­யாது என சில ஐரோப்­பிய நாடுகள் தடை­களை விதித்து அவர்­களை தமது எல்­லை­களில் வைத்து அடித்து விரட்­டிய காட்­சி­களை கடந்த வருடம் நாம் கண்டு கவ­லைப்­பட்டோம்.
அவர்­க­ளுக்­காக அனு­தா­பப்­பட்டோம். மனி­தா­பி­மா­ன­மற்ற வகையில் இந்த நாடுகள் நடக்­கின்­ற­னவே என்று விமர்­சித்தோம். ஆனால் இன்று நமது நாட்­டிலும் இதே செயல் நடந்­தே­றி­விட்­டது.
இலங்­கையில் இனக்­க­ல­வரம் மற்றும் யுத்தம் வெடித்­ததைத் தொடர்ந்து சகல சமூ­கங்­க­ளையும் சேர்ந்த சுமார்  20 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளி­யேறி சர்­வ­தேச நாடு­களில் தஞ்­ச­ம­டைந்­தனர்.  இவ்­வா­றான பின்­பு­லத்தைக் கொண்ட மியன்­மா­ரி­லி­ருந்து உயிர்­தப்பி வந்த வெறும் 32 அக­தி­களை பாது­காப்­ப­தற்கும் பரா­ம­ரிப்­ப­தற்கும் தயா­ரில்லை என்­பது வெட்கித் தலை­கு­னிய வேண்­டி­யது என அமைச்சர் ராஜித கூறி­யி­ருக்கும் கருத்து இங்கு கவ­னத்தில் கொள்ளத் தக்­க­தாகும்.
அதே­போன்று இந்த மக்­களை ஒரு­சாரார் விரட்­டி­ய­டிக்கத் துடிக்­கின்ற நிலையில் அவர்­களை விடவும் மிகப் பெரும்­பான்­மை­யான மக்கள் அவர்­களை பொறுப்­பேற்­கவும் உப­ச­ரிக்­கவும் முன்­வந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது ஆறு­த­ல­ளிப்­ப­தாகும். 
உண்­மையில் இந்த அக­திகள் நாட்­டுக்குள் பிர­வே­சித்த போது அவர்­களை மீட்ட கடற்­ப­டை­யினர், அவர்­களைப் பரா­ம­ரிக்கப் பொறுப்­பேற்ற ஐ.நா. அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம், இவர்­களை தடுப்பு முகா­மி­லி­ருந்து விடு­விக்க சட்ட ரீதி­யாக குரல் கொடுத்த RRT அமைப்பு, இவர்­களை தமது பொறுப்பில் எடுத்து பரா­ம­ரித்து வந்த அர­ச­சார்­பற்ற நிறு­வ­ன­மான முஸ்லிம் எயிட் ஆகி­யோரும் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்களாவர்.
இந்த அகதிகளை தற்போது கனடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. சில சமயங்களில் தற்போது நடந்த கசப்பான நிகழ்வின் மூலமாக, அவர்களுக்கு கனடாவில் வெகு விரைவில் இனிப்பானதொரு வாழ்வு கிடைப்பதற்கான சூழலை இறைவன் ஏற்படுத்தக் கூடும். அதற்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.
(விடிவெள்ளி பத்திரிகையில் இன்று -29- வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)

1 comment:

  1. As we muslim we must be very careful hereafter. We can't trust this government

    ReplyDelete

Powered by Blogger.