Header Ads



குர்திஷ் தனிநாடாக பிரிவதற்கு, ஆதரவளிக்கும் ஒரேயொரு நாடு இஸ்ரேல் மாத்திரமே

ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தானில் சர்வதேச எதிர்ப்பு மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் தனிநாடு பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது.

உள்நாட்டு நேரப்படி நேற்று காலை ஆரம்பமான வாக்கெடுப்பு தலைநகர் பக்தாத் மற்றும் வடக்கு நகரான எர்பிலுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதிகளிலும் இடம்பெற்றது. இதில் பல இனங்களும் கலந்திருக்கும் மற்றொரு சர்ச்சைக்குரிய பகுதியான எண்ணெய் வளம் கொண்ட கிர்குக்கிலும் மக்கள் நேற்று வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பை கடுமையாக எதிர்க்கும் பக்தாதின் மத்திய அரசு வாக்கெடுப்பை ஒட்டி பிராந்தியத்தின் சர்வதேச விமானநிலையத்தை ஞாயிறன்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

அதேபோன்று குர்திஷ் பிராந்தியத்துடன் எண்ணெய் இறக்குமதிகளில் ஈடுபடக் கூடாது என்று ஈராக் மத்திய அரசு வெளிநாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி, இந்த வாக்கெடுப்பு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஈராக்கை சிதைப்பதை ஏற்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

“எமது பிரஜைகளின் சமூக கட்டமைப்புக்கு இந்த முடிவு எதிரானதாகும். நாம் சர்வஜன வாக்கெடுப்பை அங்கீகரிப்பதில்லை. அதன் முடிவையும் ஏற்கப்போவதில்லை” என்று அபதி குறிப்பிட்டார்.

“ஒன்றுபட்ட ஈராக்கில் இருக்கும் அனைத்து பிரஜைகளினதும் நலனை கருதி நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நாம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம்” என்றும் அபதி கூறினார்.

குர்திஷ் பிராந்திய அரசின் தலைவர் மசூத் பர்சானி, இந்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு நியாயம் கூறியுள்ளார்.

“குர்திஷ் பிராந்திய மக்களிடம் தமது எதிர்காலம் பற்றி ஜனநாயக வழியில் கேட்பது ஒரு குற்றச் செயலா?” என்று ஞாயிறன்று ஆற்றிய உரை ஒன்றில் பர்சானி கேள்வி எழுப்பினார்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பின் முடிவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி ஈராக் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றும் குர்திஷ் தலைவர் உறுதி அளித்துள்ளார்.

“எம்மால் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க முடியுமானால் குர்த்ஷ் மற்றும் பக்தாதுக்கு இடையில் சிறந்த உறவை ஏற்படுத்த மேலும் கால அவகாசம் பெற முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

குர்திஷ் பிராந்தியம் எங்கும் 10 மணி நேர காலத்திற்கு சுமார் 2,065 வாக்குச் சாவடிகள் திறந்திருந்தன. வடக்கு ஈராக்கில் குர்திஸ்தான் மற்றும் ஏனைய குர்திஷ் கட்டுப்பாட்டு பகுதியில் மொத்தம் 5.6 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இதன்போது குர்திஷ் பிராந்தியம் மற்றும் அந்த பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள குர்திஷ் பகுதிகள் ஒரு சுதந்திர நாடாவதை ஏற்பதா? என்று வாக்காளர்களிடம் கேட்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பின் உத்தியோகபூர்வ முடிவு இன்று செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அதிகாரம் அற்ற இந்த வாக்கெடுப்பின் முடிவை அடுத்து உத்தியோகபூர்வ சுதந்திர பிரகடனங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு அண்டை நாடுகளிலும் அவதானத்தை பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பு தமது நாட்டில் இருக்கும் குர்திஷ்களிடம் பிரிவினைக்கு தூண்டும் என்று துருக்கி, ஈரான் மற்றும் சிரியா நாடுகள் அச்சமடைந்துள்ளன.

பக்தாத் மத்திய அரசின் கோரிக்கையை அடுத்து குர்திஷ் பிராந்தியத்திற்கான விமானப் போக்குவரத்துகளை ஈரான் நிறுத்தியுள்ளது. குர்திஷ்தான் பிராந்தியத்தின் மீது தடைகளை விதிப்பதாக துருக்கி எச்சரித்துள்ளது. துருக்கி டாங்கிகள் வடக்கு ஈராக் எல்லையை நோக்கி நிலைநிறுத்தப்பட்டிருப்பதோடு ஈராக் மற்றும் சிரியாவில் துருக்கி இராணுவத்தின் தலையீட்டை நீடிக்க அந்நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.

துருக்கி உள்நாட்டில் குர்திஷ் பிரிவினைவாதிகளுடன் பல தசாப்தங்களாக போரிட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளும் இந்த சர்வஜன வாக்கெடுப்புக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பு நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் என்று ஐ.நா எச்சரித்திருப்பதோடு, இது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிரான போரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா எச்சரித்தது.

குர்திஷ் தனிநாடாக பிரிவதற்கு இஸ்ரேல் மாத்திரமே ஆதரவு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தனித்துவமான இனக்குழுவாக இருக்கும் குர்திஷ் மக்கள் ஈராக், சிரியா, துருக்கி மற்றும் ஈரான் நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். மத்திய கிழக்கில் நான்காவது மிகப்பெரிய இனக்குழுவாக இருக்கும் இவர்கள் உலகில் சொந்த நாடு இல்லாத மக்களாக உள்ளனர். 

1 comment:

  1. யூதர்களும் சொந்த நாடு இல்லாதவர்கள்தான், அடித்துப்பறித்த பாலஸ்தீன நிலம் விரைவில் மீட்கப்படும். இன்ஷாஅல்லாஹ்...

    ReplyDelete

Powered by Blogger.