Header Ads



ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிராக, சமூக ஊடகங்களின் கொடூரம்...!

ரோஹிங்கியா செயற்பாட்டாளர்களின் சமூக ஊடகக் கணக்குகள் கட்டுப்படுத்தப்படுவது பல கேள்விகளை எழுப்புகின்றது.

ஷா ஹுசைன் என்பவர் சவூதியில் வசிக்கும் மிக முக்கியமான செயற்பாட்டாளர். 2010 ம் ஆண்டு முதலே ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை அவர் நிர்வகித்து வருகிறார். அண்மையில் அவர் மியன்மார் ரக்கைன் மாகாணம் தொடர்பாக அவரது ஃபேஸ்புக் கணக்கில் பதிந்த இடுகைகள் நீக்கப்பட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நீக்கப்பட்ட இடுகைகளில் மியன்மாரில் நடக்கும் வன்முறையை விளக்கும் படங்களும் இருந்துள்ளன. ஆனால், இந்தப் படங்கள் எதுவும் ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறும் படங்கள் இல்லை. வன்முறையைக் கொண்டாடும் அல்லது மகிமைப்படுத்தும் படங்களைத்தான் முகநூலில் பகிரக் கூடாது. மற்றப்படி பொதுநலனுக்காக என்று கருதப்படும் படங்களை, இடுகைகளை பகிர ஃபேஸ்புக் விதிமுறைகள் அனுமதிக்கின்றன.

"எனக்கு மியன்மாரில் வசிக்கும் சிலருடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து அங்கு கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையின் புகைப்படங்களை, காணொளி காட்சிகளை அனுப்புகிறார்கள்" என்கிறார் ஹுசைன்.

"எனக்கு பல படங்கள் அங்கிருந்து வருகின்றன. அவை அனைத்தும் அங்கு நடக்கும் வன்முறையை விபரிக்கும் படங்கள்.

இந்தப் படங்களை மக்களின் பார்வைக்கு வைக்காமல் வேறு எதனை வைக்கப் போகிறோம்?"

இவ்வாறு கேட்கிறார் அவர்.

மியன்மார் பிரதேசத்தில் மோதல் தொடங்கியவுடன், அது தொடர்பான இடுகைகளும், படங்களும் பலரது சமூக ஊடகக் கணக்கிலிருந்து நீக்கப்பட்டு உள்ளன. அதில் ஹூசைனும் ஒருவர். சொல்லப் போனால், ஃபேஸ்புக் மட்டும் அந்த கலவரம் தொடர்பான படங்களை நீக்கவில்லை. யூடியூப் நிறுவனமும் காணொளிகளை நீக்கி இருக்கிறது. ஹூசைன் 'அரக்கான் செய்தி நிறுவனம்' என்ற பெயரில் யூ-டியூப் சேனலை நடத்தி வருகிறார்.

"அந்த சேனலை 60,000 இற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். திடீரென்று அந்த யூ-டியூப் கணக்கு நீக்கப்பட்டு இருக்கிறது. இதை நாங்கள் சமூக ஊடகத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் எங்கள் பிரச்சினைகளை பொதுசமூகத்தின் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம். ஆனால், சமூக ஊடகங்கள் எங்களை தடுக்கின்றன" என்றார் அவர்.

ஹூசைன் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பல்வேறு இடுகைகள் புகைப்படங்களைக் கொண்டிருந்தன. இறந்து போன ஒரு பெண் கீழே கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறார், அவரைப் புதைக்க ஆண்கள் குழிதோண்டுவது போன்று ஒரு படம் அவரது ஃபேஸ்புக் கணக்கில் பதியப்பட்டிருக்கிறது.

இன்னொரு வீடியோவில், ஒரு சிறுவன் நிர்வாணமாக தலையில் வெட்டுக் காயங்களுடனும், தீக்காயங்களுடனும் இருக்கிறான். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஆயுதக்குழுக்கள் அவனது கிராமத்தை எரித்ததால், அவன் தீக்காயங்களுக்கு உள்ளாகினான் என்று கூறுகிறார்கள்.

ஹூசனினின் சமூக ஊடக கணக்குகள் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. ஜெர்மனியில் வசிக்கும் ரோஹிஞ்சா செயற்பாட்டாளரான நய் சான் லூயின் என்பவரின் ஃபேஸ்புக் இடுகைகளும் நீக்கப்பட்டுள்ளன.

கோலாலம்பூரில் வசிக்கும் ஒருவர் மியான்மர் தொடர்பாக ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் பதிவிட்டு இருக்கிறார். ஆனால், அதுவும் ஃபேஸ்புக் நிர்வாகத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து 72 மணி நேரத்தில் ஃபேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டு இருக்கிறது.

"எனது முகநூல் பக்கத்தில் மியன்மார் தொடர்பான படங்களைப் பகிர்வதால், எனக்கு கொலை மிரட்டலும் வருகிறது" என்று சொல்லும் லூயின், சமூக ஊடகக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகள் அரசினாலும், அரசை ஆதரிக்கும் குழுக்களாலும் திட்டமிட்டு செய்யப்படுகின்றன என்று தான் நம்புவதாகக் கூறுகிறார்.

மியன்மார் தொடர்பாக ஆய்வு செய்யும் சர்வதேச மன்னிப்பு சபையைச் சேர்ந்த லாரா ஹை, "ரோஹிங்கியா செயற்பாட்டாளர்களின் ஃபேஸ்புக் மற்றும் ட்வீட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் பதியும் படங்கள் நீக்கப்படுவதாக எங்களுக்கும் புகார்கள் வந்துள்ளன. இது எதனால், யாரால் நிகழ்கிறது என்பது தெளிவற்ற ஒன்றாக இருக்கிறது" என்கிறார். " திரைமறைவில் நடந்து கொண்டிருக்கும் பிரசார யுத்தத்தின் ஒரு பகுதி" என்று வர்ணிக்கிறார் அவர்.


(பிபிசி)

No comments

Powered by Blogger.