Header Ads



துரோகிகளை மக்கள், நிராகரிக்க வேண்டும் - அப்துர் ரஹ்மான் அழைப்பு

"மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கடமைப்பட்டவர்களே அதனை அடகு வைக்கும் நிலைக்கு சென்று விட்ட பிறகு தமது உரிமையைப் பாதுகாப்பதற்காக நீதி மன்றத்தின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக அரசியலில் இது ஒரு மோசமான பிற்போக்கு நிலையாகும். மக்கள் பிரதிநிதிகளே மக்களுக்குத் துரோகம் செய்வதாக மாறுவதும் அவர்களின் அநியாயங்களுக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதும் ஆரோக்யமான நிலையல்ல. இது தொடர்வதனை இனிமேலும் அனுமதிக்க முடியாது."

என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

“20ஆவது திருத்தம்: என்ன நடக்கிறது?" என்ற தலைப்பில் விசேட மக்கள் சந்திப் பொன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) காத்தான்குடியில் நேற்று (15.09.2017) நடாத்தியது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

20 ஆவது திருத்த விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளும் அரசியல் வாதிகளும் மீண்டுமொரு முறை மக்களுக்கு விரோதமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் முஸ்லிம் உறுப்பினர்களும் 20 அவது திருத்த விடயத்தில் நடந்து கொண்ட விதம் முஸ்லிம் சமுகத்தை ஏமாற்றமடையச் செய்திருப்பதோடு ஜனநாயகத்தை நேசிக்கும் அத்தனை பெயரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.  தமது பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்படப் போகிறது என்ற ஒரே காரணத்திற்காக மக்களின் அடிப்படை வாக்குரிமையைக்கூட அடகு வைப்பதற்கு இவர்கள் துணிந்திருக்கிறார்கள். 

தமக்கு வாக்களித்து பதவிகளில் அமர்த்திய மக்களின் வாக்குரிமையையே தமது சொந்த இலாபங்களுக்காக அடகு வைக்கின்ற ஒரு துரோகத்தன செயல் இதுவாகும். கிழக்கு மாகாண சபையைப் பொறுத்த வரையில் மக்களின் உரிமைகளை அடகு வைக்கும் வகையில் நடந்து கொள்வது இது முதற் தடவையுமல்ல. உதாரணமாக, கடந்த 2012  மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து கூட்டப்பட்ட முதலாவது சபை அமர்விலேயே  மக்களுக்குத் துரோகமான இவ்வாறான காரியம் ஒன்றை இவர்கள் செய்திருக்கிறார்கள்.

இந்த அனுபவங்களின் அடிப்படையில்தான், எந்த சூழ்நிலையிலும் மக்களுக்குத் துரோகம் செய்யாத,  என்றென்றும் மக்களுக்கு விசுவாசமான ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உழைத்து வருகிறது. மக்களுக்குத் துரோகம் செய்யத் துணிந்து விட்ட கட்சிகளையும் நபர்களையும் நிராகரித்து விட்டு மக்களுக்கு விசுவாசமான ஒரு புதிய அரசியல் சக்தியை கட்டியெழுப்புவதே தற்போது நமக்கு முன்னாலுள்ள ஒரே தெரிவாகும்."

No comments

Powered by Blogger.