September 27, 2017

ரோஹிங்ய அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக இனவாத பிக்குகள் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் முன்னெடுத்த நடவடிக்கையானது மிகவும் கண்டிக்கத்தக்கதும் மனிதாபிமானமற்றதுமாகும். இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி 30 பேர் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த படகு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பரப்பில் நுழைந்ததையடுத்து கடற்படையினர் இவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். பின்னர் சுன்னாகம் நீதிமன்றின் உத்தரவின் பேரில் இவர்கள் அனைவரும் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந் நிலையில் நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக யு.என்.எச்.ஆர்.சி நிறுவனத்தின் அனுசரணையில் இவ் அகதிகளை வீடு ஒன்றில் தங்க வைப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி இவர்கள் அனைவரும் கல்கிசையிலுள்ள வீடொன்றுக்கு இடமாற்றப்பட்டனர்.

இவ்வாறு குறித்த வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே இவர்களை அங்கிருந்து வெ ளியேற்றுமாறும் நாட்டைவிட்டு அனுப்புமாரும் கோரி பிக்குகள் தலைமையிலான இனவாதிகள் நேற்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த ரோஹிங்யா அகதிகள் தீவிரவாதிகள் என்றும் ஐ.எஸ். போராளிகள் என்றும் பொய்யான பிரசாரங்களை கட்டவிழ்த்துள்ள மேற்படி பிக்குகள் தலைமையிலான குழுவினர் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயங்களை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளை வெகுவாக முன்னெடுத்துள்ளனர். இதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். 

இலட்சக்கணக்கான ரோஹிங்யா அகதிகள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருப்பதாக தீவிர பிரசாரம் ஒன்றை இந்த இனவாத சக்திகள் முன்னெடுத்து வருகின்றன. எனினும் இதனை பொலிசாரோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ உடனுக்குடன் மறுக்காது அமைதிகாப்பது இனவாதிகளின் இந்த பிரசாரத்தை மக்கள் நம்புவதற்கு வழிவகுத்துள்ளது. 

நேற்றைய தினம் கூட பொலிசார் அகதிகள் குறித்த இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என ஊடகங்களிடமும் பிக்குகளிடமும் கூறியமை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். 

மியன்மாரில் பௌத்த இனவாதிகள் மற்றும் அந்நாட்டு இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களால் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்த வெளியேறிய மக்களுக்கு இலங்கையிலும் பௌத்த இனவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதானது மிகவும் கவலைக்குரியதாகும். ஐ.நா.வின் சர்வதேச உடன்படிக்கைகளுக்கமைய குறித்த அகதிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடாகும். 

உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த விடயத்தில் தலையிட்டு இந்த அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிழையான மனப்பதிவை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்த விரும்புகிறோம்.

-விடிவெள்ளி பத்திரிகை வெளியட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

1 கருத்துரைகள்:

Sevidan Kathil Oothiya Sangu

Post a Comment