September 27, 2017

*வெட்கித்தலை குனிகிறேன்*

வந்தாரை வரவேற்கும் ஆசிய கலாச்சாரமா இது...?
எறும்புகளுக்கு கூட துரும்பு அளவும் துன்பம்  இழைக்கக்கூடாது
என்கிற புத்தன் கற்பித்த மார்க்கத்தை ஓதுகின்ற மக்களைக்கொண்ட நாட்டின் ஒழுக்கமா இது... ? 

ஆதரவற்று அனைத்தையும் இழந்து தஞ்சம் தேடி வந்த மியான்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கொடுக்கிற விருந்துபசாரமா  இது ..? 

விருந்தோம்பல் எல்லாமே வெறும் ஏடுகளில்தானா ?அரபு நாடுகளைப்போல ... 

வெட்கப்பட வேண்டியுள்ளது ..

ஐரோப்பிய நாடுகளிடம் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் மட்டுமல்ல வந்தாரை வரவேற்று அகதிகளுக்கு அளிக்கின்ற ஆதரவு குறித்து இஸ்லாத்தை பேரளவில் பின்பற்றுகிற அரபு நாடுகளும் பௌத்தத்தை போதிக்கின்ற நமது நாடும் பாடம் எடுக்க வேண்டியுள்ளது 

இன்னமும் ஞாபகம் இருக்கின்றது ..

அது 1998
நீண்டதொரு  பயணம் . 
கொண்டைனர்  மூலமாக போலந்தில் இருந்து ஜெர்மணி ஊடாக பிரிட்டனின் டோவரை வந்தடையும் வரை ஆடு மாடுகள் போல உள்ளே அடைக்கப்பற்றிருந்தோம் . ஒரே ஒரு இடத்தில் காட்டுப்பகுதியில் சிறுநீர் கழிக்க நிறுத்த பட்டோம் .

டோவரை அடைந்தபோது மனதுக்குள் இனந்தெரியாத பயம் . பிரிட்டனின் குடிவரவு பொலிஸார் மிகவும் அன்புடன் நடத்தினார்கள் . போர்த்துவதற்கு புடவை ,குடிப்பதற்கு காபி உண்ணுவதற்கு உணவு ஏன் பார்ப்பதற்கு தொலைக்காட்சி கூட  வழங்கப்பட்டு நாங்கள் மிக அன்பாக விசாரிக்கப்பட்டோம் . 

விசாரிக்கப்பட்ட பின்னர் தங்குவதற்கு இடம் ,உடுக்க உடைகள் ,உணவு வவுச்சர்கள் ,கைச்செலவுக்கு பணம் ஆகியன வழங்கப்பட்டோம் . கூண்டுக்குள் அடைத்து வைக்கப்படாமல் சுதந்திரமாக விடப்பட்டோம் .

எங்களது அகதி அந்தஸ்து வழக்கை விசாரித்த பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட போது
விரும்பினால்  நாடுகளை சுற்றிப்பார்க்க  கடவுசீட்டுக்கு  நிகரான பயண ஆவணம் வழங்கப்பட்டது . வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது 

ஐந்து வருடங்களில் இந்நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டது . இந்த நாட்டில் பிறந்து வளர்த்தவன் எதை எதை எல்லாம் 
செய்ய முடியுமோ அவற்றை எல்லாமே செய்யும் உரிமையுடன் இஸ்லாத்தை சுதந்திரமாக பின்பற்றுகிற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

நிக்காப் போடவோ ,தொப்பி அணியவோ , ஹிஜாப் அணியவோ ஐந்து நேரம் தொழவோ ,
அதான் சொல்லவோ ஏன் பள்ளிவாசல்களை கட்டவோ எந்த தடைகளுமே இல்லை 

உன்னதமான இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள அரபு நாடுகள் நமது நாட்டில் இருந்து செல்லுவோரை நடத்துகிற விதத்தை பார்க்கும் போது இஸ்லாம் இல்லாமல் இஸ்லாமிய பண்பில் வாழ்கிற மேற்கு ஐரோப்பியரை நினைத்து பார்க்கிறேன்  ..

பேரளவில் பௌத்தத்தை பின்பற்றுகின்ற பேரினவாதிகளுக்கு மௌனம் காக்கிற நமது  நாட்டையும் நினைத்து ப்பார்க்கிறேன் 

வெட்கித்தலை குனிகிறேன் ..

-அய்யாஷ்

6 கருத்துரைகள்:

this should publish in English or Sinhala

அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக் கொண்டவன் மட்டும் தான் அல்லாஹ்விடத்தில் மதிப்புக்குரியவன்.அல்லாஹ்வை நிராகரித்தவன் எத்தகைய மனித நேயனாக இருந்த போதிலும்.....
பெரும்பாலான எமது முஸ்லிம்களுக்கு அரபு நாடுகளை எழுத்தில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் நிறைவு இல்லை. ... ஆனாலும் அதற்காக அவர்கள் அல்லிக்கொட்டிக் கொண்டு செய்த, செய்கின்ற உதவிகளை பட்டியலிட்டுக் கொண்டா இருக்க முடியும்...
கவிஞரே நீர் பிறரை சாடும் முன் நிறையவே தேடிக் கற்கவேண்டும். அவதூறுக்கு இறைவனிடத்தில் தண்டனை உண்டு . அஞ்சிக்கொள்ளுங்கள்.

இப்போ விளங்குகிறதா கிருஸ்தவ நாடுகளுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை?

"மனித நேயம்" இரண்டாவதில் 0%.

இப்ஹாம் முஹம்மத் அவர்கள் கூறியவைகளை நானும் முன்வைக்கிறேன்,அத்துடன் மேலோட்டமாக மேய்ந்து விட்டு கருத்து சொல்வதை நிறுத்திக்கொள்வது உங்களை அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகத்துகொள்ள உங்களுக்கு முடியுமான ஒன்று ரசூல் ஸல் கூறினார்கள் "கேள்விப்படுவதை எல்லாம் சொல்லித்திரிபவன் பொய்யன்" என்றார்கள்

சரியான கருத்து பேற்குலகம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டும்

Post a Comment