Header Ads



இராணுவ வீரர்களின் உதவியுடன், தடையற்ற மின் விநியோகத்தை வழங்கத் தயார்

மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கும் நிலையில், தேவைப்பட்டால் அல்லது அழைப்பு விடுக்கப்பட்டால், இராணுவ வீரர்களின் உதவியுடன் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கத் தயார் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

அவ்வாறு உதவி கோரப்படும் பட்சத்தில் அனுப்புவதற்காக இராணுவ வீரர்கள் அடங்கிய 89 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், எந்த வித இடையூறு ஏற்பட்டாலும் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று மின்சார சபை தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

“எமது போராட்டத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக மின்சார சபையில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றவர்களை பணிக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. என்றபோதும், இதுவரை ஓய்வுபெற்ற ஒருவரும் வேலைக்குச் சமுகமளிக்கவில்லை. என்ன நடந்தாலும் உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டத்தை நாம் நிறுத்தப்போவதில்லை” என்று மின்சார சபை ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் சில பிரதேசங்களில் தமது ஊழியர்கள் நாச வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜெயவர்தன தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்களைத் தாம் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.