Header Ads



அர்ஹம் மௌலவியின் மரணம், அழைப்பாளர்கள் சுயபரிசோதனை செய்யவேண்டிய தருணம் - முஜாஹித் மௌலவி

இறை திருப்தியை இலக்காகக் கொண்டதே ஈமானிய வாழ்வு. அதில் தஃவா என்பது ஒரு சுமையான பொறுப்பு. எதற்காக ஷரீஆ அறிவைக் கற்கிறோம் என்ற தௌிவில்லாத வயதிலேயே பலர் இந்த அறிவைக் கற்கிறார்கள். குறிப்பிட்ட பருவத்தில் தஃவா எனும் பெரு நீர் ஓடையில் நீந்தியே ஆகவேண்டிய சூழ்நிலையை அந்த அறிவு உருவாக்குகிறது. காலப்போக்கிலேயே கற்றுக்கொள்கிறார்கள். சமூக உணர்வை முழுமையாக உள்வாங்குவதற்குள் சற்று வயதாகிவிடுகிறான்.  நான் இன்னும் கற்கவே இல்லை. கற்ற அளவிலான கல்வி கூட என் நடை முறை வாழ்வில் இல்லை என்று அவன் உணரும்போது தஃவா சற்றுக் கசக்கும் உணர்வை அவன் பெருகிறான். இதில் எல்லோரும் சம நிலையில் இல்லாது விட்டாலும் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரமாவது இந்த நிலை இருக்கும்.
.
    அழைப்பாளன் தன் ஆன்மீக வறுமையை சீர் செய்ய எடுக்கும் போராட்டம் தூய்மையாக இருந்தால் அதன் விளைவு மகத்தானது. அழகானது. ஆளுமை மிக்கது. அறிவுப் பின்புலத்துடன் உருவாகும் அந்த சுய பரிசோதனை அவனை அறிவின் ஆழங்களை தொடவைக்கிறது. இதயத்தின் இறுதியையும் இளக வைக்கிறது. இந்த நிலைகளை அடையாமல் வெறுமனே பிரச்சாரம் பயணிக்குமென்றால் வரட்சியான ஆன்மீக சமூகமொன்றை அது உருவாக்கும் அந்த நிலை அழைப்பாளனின் சமூக வாழ்விற்கும் மறுமை வாழ்வுக்கும் பெரும் சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
.
மௌலவி அர்ஹம் இஹ்ஸானி அவர்களின் இறுதி தசாப்தங்களிலான மாற்றத்தை நெருக்கமாக இருந்து அறியக்கிடைத்தவன் என்ற வகையில் மேற்சொன்ன ஈமானியத் தேடலின் பிரதிபலிப்பை மிகவும் உணர்ந்தேன்.  நகைச்சுவைப் பண்பு மிகைத்திருந்த அவரது வாழ்வில் திடீர் மாற்றம். கவலை தோய்ந்த முகத்துடனே அதிகம் காணப்பட்டார். நான் மார்க்கத்தை கற்கவேண்டும் கற்றுத் தருவீர்களா? என்று என்னிடம் ஆதில் ஹக் அப்பாஸி, நௌபர் காஷிபி, ரயீஸுத்தீன் ஷரஈ, அன்ஸார் தப்லீகீ என்று பலரிடம் அறிவுக்காத் தேடிச் சென்று படித்தார். அதற்காக அவர் வெட்கப்படவில்லை.
.
depression ஆல் மிகவும் கஷ்டப்பட்டார் தனது ஆன்மீக சுயபரிசோதனை பற்றி மிகவும் அலட்டிக்கொண்டார். அதன் விளைவாகக் கூட அந்த நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். தனது நோயிற்கு மருந்து வாங்க ஒரு சில 1000கள் இல்லாமல் கூட கஷ்டப்பட்டார். அவருக்கு நெருக்கமாக இருந்த சகோதரர்களை அளவுக்கு மேல் கஷ்டப்படுத்துவிட்டேன் என்று பல முறை துடித்துப் போனார். “என் உலக வாழ்வு நான் நினைத்தது போல் அமையவில்லை, ஆனாலும் இறைவன் விரும்பும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது ” என்று தனது வட்ஸப் status ஐப் பதிவிட்டது அவர் தன் ஆன்மீக உயிரோட்டத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டியது.
.
தன் இறுதிக் காலப் பகுதியில் தௌபா செய்வதிலும் பிறருக்கு தவறு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்பதிலுமே நிறையக் கழித்தார். குறிப்பாக தான் தஃவாக்களத்தில் அல்லாஹ்வுக்காக விமரிசித்திருந்தாலும் அதில் யாரையாவது பாதிக்கச் செய்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பகிரங்கமாவே மன்னிப்புக் கேட்டார். இறுதிக் காலப் பகுதியில் இறைவன் ஒருவருக்கு தௌபாவுக்கான உள்ளுணர்வைக் கொடுப்பதை விட  வேறென்ன அருள் ஒரு முஃமினுக்கு வேண்டும்.
.
இறுதிக் காலத்தில் உலக ரீதியாக அவரைப் பலர் மறந்திருந்தார்கள் என்பதே உண்மை. அதை நினைத்து பல நேரத்தில் கண்ணீர் வடித்திருக்கிறார். பலர் அவரது ஜனாஸாவில் குற்ற உணர்ச்சியோடுதான் தொழுதிருப்பார்கள். ஸஊதியில் இருப்பதால் என்னால் அந்தப் பணிவு மிக்க மனிதனின் ஜனாஸாவில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் அதே குற்ற உணர்ச்சி எனக்கும் உண்டு. அற்பமான வாழ்வின் அர்த்தமற்ற ஆசைகள் பல பொழுதுகளில் கவனமெடுக்கப்பட வேண்டியவர்களையும் புறக்கணிக்கச் செய்துவிடுகின்றன.
.
இலங்கையின் ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆணிவேர் அப்துல் ஹமீத் அவர்களின் மக்காவிலான மரணம்  நிஸார் குவ்வதியின் மரணம்    தொடர்ந்து வந்த மீரான் பாஸியின் மரணம் இப்பொழுது அர்ஹம் மௌலவியின் மரணம். தாம் சுயமாக இயங்கும் காலங்களிலேயே அவர்களை இறைவன் மரணிக்கச் செய்துவிட்டான். ( رحمنا الله وإياهم جميعا)
.
“உஸ்தாத்”என்று தனது வயதிலும் குறைந்த பலரை அழைத்த அந்தப் பெரிய மனிதர் மரணித்துவிட்டார். அடக்கிய கைகளின் ஈரம் மனதில் காய்வதற்கு முன்னால் அழைப்பாளர்கள் தங்களை சுய பரிசோதனை செய்ய திடசங்கர்ப்பம் பூணவேண்டும். அழைப்பின் அழகே ஆன்மீக உயிரோட்டமுள்ள சுயவாழ்வில்தான் இருக்கிறது.
..
யா அல்லா உன் கருணையை நம்பி வாழ்ந்த அந்த மனிதரின் பாவங்களை மன்னித்ருள்புரிவாயாக…….

نحسبه هكذا ولا نزكي على الله أحدا

2 comments:

  1. அற்பமான வாழ்வின் அர்த்தமற்ற ஆசைகள் பல பொழுதுகளில் கவனமெடுக்கப்பட வேண்டியவர்களையும் புறக்கணிக்கச் செய்துவிடுகின்றன.
    யா அல்லா உன் கருணையை நம்பி வாழ்ந்த அந்த மனிதரின் பாவங்களை மன்னித்ருள்புரிவாயாக…….


    ReplyDelete

Powered by Blogger.