Header Ads



அனிதா தற்கொலை - மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் அனிதா, நீட் தேர்வு முறையினால் மருத்துவராக முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏழைகளுக்கும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பு என்பது நீட் தேர்வினால் எட்டாக்கனியாக உயரத்தில் நிற்கின்றது. CBSE பாடத்திட்டத்தில் படித்து வெளிவரும் வசதியுள்ள மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வின் மூலம் மருத்துவராகும் அவலநிலையை மோடி அரசு உண்டாக்கியுள்ளது.

மருத்துவராகும் எண்ணம் கொண்ட மாணவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக இந்த நீட் தேர்வை மத்திய மோடி அரசு மாணவர்களிடம் திணித்துள்ளது.

தமிழகத்திலோ அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளை இணைப்பதற்கு ஆளும் அரசு காட்டிய அக்கறையை, அணு அளவிற்கு அனிதாவின் பிரச்சனையான நீட் தேர்வில் காட்டியிருந்தால் நல்ல தீர்வை பெற்றிருக்க முடியும்.

நீட் தேர்வை மாணவர்களின் தலையில் திணித்த மோடி அரசையும், அதை உரிய முறையில் தடுக்க தவறிய தமிழக அரசையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
அதே வேளையில் தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். பிரச்சனை எதுவாகினும் எதிர்த்து போராடும் மன வலிமையை மாணவர்கள் பெற முயல வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இனியாவது நீட் விவகாரத்தை அலட்சியப்படுத்தாமல், நீட் தேர்வினை முழுமையாக அகற்றி ஏழை மாணவர்களும் மருத்துவராகும் சூழலை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,
M.முஹம்மது யூசுப்
பொதுச்செயலாளர் TNTJ

1 comment:

Powered by Blogger.