Header Ads



தமிழன் என்ற திமிர், எனக்கு இருக்கின்றது - மனோ

அரசாங்க அமைச்சர்கள் இங்கு வந்து யுத்தம் இல்லை, சத்தம் இல்லை என்று சொன்னால் நான் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டேன். யுத்தம் இல்லை, ஆனால் மக்களிடம் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு கண்டு கொண்டிருக்கின்றோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட ஒந்தாச்சி மடத்தில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிகையில்,

மட்டக்களப்பிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு எமது அமைச்சினால் புத்தகப் பைகளை வழங்குகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளையும் நாம் கவனத்தில் எடுத்துத்தான் இதனை மேற்கொண்டுள்ளோம்.

அரச அமைச்சர்கள் இங்கு வந்து யுத்தம் இல்லை, சத்தம் இல்லை என்று சொன்னால் நான் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டேன். யுத்தம் தான் இல்லை ஆனால் மக்களிடம் பிரச்சினைககள் ஏராளம் இருக்கின்றன. இதுதான் உண்மை. இந்தப் பிரச்சனைகளுக்கு நாம் படிப்படியாக தீர்வு கண்டு கொண்டிருக்கின்றோம்.

காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கும், காணாமல் போனவர்களுக்கும் பதிலைத் தேடித் தர வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. காணாமல் போன கொடுமைகள் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலே நடந்தது.

நான் ஒரு தமிழன். என் மொழியின் மீதும் என் இனத்தின் மீதும் எனக்கு அயராத பற்று இருக்கின்றது. அது மாத்திரமின்றி தமிழன் என்ற திமிரும் எனக்கு இருக்கின்றது.

எனவே தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பேன். நான் யாருக்கும் பயந்தவன் அல்ல. நீதிக்கும், நேர்மைக்கும், மாத்திரம் தான் பணிந்தவன் நான்.

இந்த நாடு தனி ஒரு இனத்திற்குச் சொந்தமான நாடு அல்ல. ஒரு மொழி தேசிய மொழி அல்ல. சிங்களமும், தமிழும் ஆட்சி மொழி தேசிய மொழிகளாகும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.