Header Ads



சதுரிக்காவின் நூலில் இருந்து, சில முக்கிய விடயங்கள்..!

மகிந்த ராஜபக்சவிற்கும், தனது தந்தையான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்புறவை, சீர்குலைத்தது பசில் ராஜபக்சவே என்று,  மைத்திரிபால சிறிசேனவின் புதல்வியான சதுரிக்கா சிறிசேன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனாதிபதி தாத்தா’ (அதிபர் தந்தை) என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலிலேயே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“போர் நடந்து கொண்டிருந்த போது சர்வாதிகாரத்தை நோக்கிய அரசியல் குறித்து அப்பா அதிருப்தி அடைந்திருந்தார். அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது அவருக்கு எதிரான அநீதிகள் கூடியதே தவிர  குறையவில்லை. அவர் அரசிலிருந்து விலகும் மனபான்மை வரும் வரைக்கும் அது உக்கிரமடைந்தது. மூன்றாவது முறையும் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு முனைந்த போது, அவரைப் போட்டியிட வேண்டாம் என்று நேரடியாகவே பல தடவைகள் அப்பா கூறியிருந்தார். அவ்வாறு கூறுவதற்கு அவர் அஞ்சவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை வேறு ஒருவருக்கு வழங்குமாறு கடிதமும் எழுதியிருந்தார். எனினும் இறுதியில் வைராக்கியம் இன்னும் இன்னும் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை. மகிந்த ராஜபக்சவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு காணப்பட்டது. 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து,  2004 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவிபியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக போட்டியிட்டு வெற்றிபெற்றது.

இதன்போது பிரதமர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தையில் அநுர பண்டாரநாயக்கவின் பெயரை அப்போதைய அதிபர் சந்திரிகா குமாரதுங்க முன்மொழிந்தார். எனினும் இதற்கு ஜேவிபி கடும் எதிர்ப்பு வெளியிட்டது. இதையடுத்து சந்திரிகா அம்மையார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான அப்பாவின் பெயரை முன்வைத்த போது அதற்கு அப்பா இணங்கவில்லை. அதற்கு பதிலாக அவர் மகிந்த ராஜபக்சவின் பெயரையே முன்வைத்தார்.

இதையடுத்து, அனைவரின் இணக்கத்தின் பிரகாரம் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். அத்துடன் 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு அநுர பண்டாரநாயக்கவின் பெயரை சந்திரிகா குமாரதுங்க முன்மொழிந்த போது, தற்போதைய நிலையில் வேட்பாளராக நிறுத்துவதற்கு  மகிந்த ராஜபக்சவே தகுதியானவர் என அப்பா முன்மொழிந்தார். அதனை அலவி மெளலானா அமோதித்தார்.

அப்போது வேறு யார் தான் உள்ளார் என கூறி சந்திரிகா அம்மையார் அதிருப்தியுடனே சென்றார்.  தனக்கு கிடைத்த வாய்ப்பை அப்பா தியாகம் செய்தார். அதிகார மோகம் கொண்டு அரசியல் ரீதியாக ராஜபக்ச தோல்வி அடைவதனை பார்க்க அவர் விரும்பவில்லை. மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக பாடுபட்டார். ராஜபக்சவை நண்பராகவே எனது அப்பா காண்பிக்க முயன்றார். ஆனால் அந்த நட்பை பயன்படுத்தி அவருக்கு எதிராக சதியும் பொறாமையும் மோலோங்கியது.

மகிந்த ராஜபக்சவுக்கும் அப்பாவுக்கு இடையிலான நட்புறவுக்கு முட்டுகட்டை போடும் வகையில் பசில் ராஜபக்ச செயற்பட்டமை நட்புறவு பாதிப்படைவதற்கு பெரும் காரணமாக இருந்தது. அவர் மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு கொள்கையை கடைபிடித்து, அதிஷ்டம் இல்லா அரசியல்வாதியாக காண்பிக்க முனைந்தார். பசில் ராஜபக்ச தேசிய அமைப்பாளராக பதவி ஏற்ற பின்னர் இது மேலும் உக்கிரமடைந்தது.

கட்சியின் உரிமையாளர் போல் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த எனது அப்பாவை கட்சிக்கு தேவையற்றவராகவே காண்பிக்க முயற்சித்தார். கட்சியின் பிரதான பதவிகளை வகித்த அப்பாவும் பசில் ராஜபக்சவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முடிந்தும், கட்சிக்கு செயலாளர் ஒருவர் இல்லாதவாறு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து அனைத்தையும் தனது விருப்பின் படி செய்தார். நாம் விதைப்போம் – நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற எனது அப்பாவின் திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து பசில் ராஜபக்ச அத்திட்டம் தனது திட்டம் என காண்பிக்க முனைந்தார். இதன்பிரகாரமே திவிநெகும திட்டம் ஆரம்பமானது.

எனினும் இந்த ஒடுக்குமுறை செயற்பாட்டில் தலையிட்டு தனது அரசியல் கெளரவத்தையும் சுயாதீன தன்மையை பாதுகாக்கும் சிறந்த தன்மை மகிந்த ராஜபக்சவிடம் இருக்கவில்லை. அதற்கு பதிலாக சமகால அரசியல் குறித்தும் அப்பா விமர்சனம் செய்வதை ஊடகங்கள் வாயிலாக பார்த்த பின்னர், தொலைபேசி ஊடாக அப்பாவை தொடர்பு கொண்டு தீட்டி தீர்ப்பார். இந்த மாற்றம் 2010 அதிபர்  தேர்தலுக்குப் பின்னர் மேலும் அதிகரித்தது.

எனினும் ஐந்து வருடங்கள் அப்பா அவையனைத்தையும் பொறுத்து கொண்டிருந்தார். இது போன்ற பல சம்பவங்கள் உள்ளன. அப்பா பொதுவேட்பாளராக அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் வரைக்கும் எந்த வகையிலும் எந்த நபரும் இத்தகைய செயற்பாடுகளில் இருந்து மாறவில்லை. இந்த காரணங்களே அப்பா அதிருப்தி அடைவதற்கு மூலமாக அமைந்தன.

அப்பா வீட்டிற்கு வரும் போது கவலையுடன் இருப்பதை அவரது முகத்தை பார்க்கும் வீட்டில் இருந்த எம்மால் உணர முடிந்தது. அப்போது எமது அம்மா , நாம் இதிலிருந்து விடுதலையாக வேண்டும் என கூறினார். அப்பாவின் கவலை மேலும் மோலோங்கியதை அடுத்து இதனை எந்நேரமும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது மாற வேண்டும் என அம்மா அழுத்தி கூறினார். வீட்டில் இருந்தாலும் அம்மாவுக்கு சிறந்த அரசியல் அறிவு இருந்தது.

போர்க்காலத்தின் போது காணப்பட்ட அரசியல் போக்கில் அதிருப்தி அடைந்திருந்த அப்பா, அரசியல் இருந்து ஓய்வு பெற நினைத்தாரே தவிர, சதித்திட்டங்களில் ஈடுபட ஒருபோதும் நினைக்கவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் சுகாதார அமைச்சராகவும் இருந்த தனக்கே இத்தகைய அழுத்தம் எனில் சாதாரண மக்களின் நிலைமையை கருதி அப்பா கவலையடைந்தார். இதன்பின்பே சிவில் அமைப்புகள் வந்து பேசின. அதன்பின்னர் பொதுவேட்பாளர் தெரிவு செய்வதில் பலரின் பெயர்கள் முன்வைத்த போதிலும் பின்னர் அப்பாவின் பெயரை சந்திரிகா அம்மையார் ‍முன்வைத்தார்.” என்றும் சதுரிக்கா சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.