Header Ads



மஹிந்தவுக்கு தலதா நெத்தியடி..!

“தனது சகோதரரான காமினி அத்துகோரளையின் மரணம் தொடர்பில் சந்தேகம் காணப்பட்டிருக்குமாயின், அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய பொறுப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குக் காணப்பட்டது” என, நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளை தெரிவித்துள்ளார்.

புதிய நீதியமைச்சரான தலதா அத்துகோரளை, தனது பணியின் முதலாவது அம்சமாக, தனது சகோதரரின் மரணம் குறித்த உண்மையைக் கண்டறிய வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது சகோதரரின் மரணம் குறித்து, தனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நற்பெயரைக் கெடுப்பதற்கான முயற்சியாகவே, தனது சகோதரரின் மரணம் குறித்த போலியான செய்தி பரப்பப்பட்டது என, நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

இருதய நோய் காரணமாக, 2002ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி, காமினி அத்துகோரளை இறப்பதற்கு முன்னர், மஹிந்த ராஜபக்‌ஷவுடன் காமினி அத்துகோரளை கொண்டிருந்த இரகசிய ஒப்பந்தங்கள் பற்றித் தனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், 10 ஆண்டுகளின் பின்னர், தனது சகோதரரின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென மஹிந்த ராஜபக்‌ஷ கோருவது, விநோதமானது எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்த காமினி அத்துகோரளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், 5 மாதங்கள் மாத்திரமே அமைச்சராகப் பதவி வகித்த அவர், தனது 51 வயதில் காலமானார்.

“எனது சகோதரரின் தங்கையான நான், ராஜபக்‌ஷவுடனும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் எனது சகோதரர் கொண்டிருந்த இரகசியமான தொடர்புகளை அறிவேன். எனது சகோதரரின் மரணம் தொடர்பாகச் சிறியளவு நம்பிக்கையீனம் காணப்பட்டிருந்தாலும், 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக வந்த பின்னர், விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க முடியும். நான் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் கோருவது, தவறான எண்ணங்களுடனேயே” என்று, நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.