Header Ads



ரோஹின்யர்களுக்கு எதிரான, இராணுவ தாக்குதலை நிறுத்து - ஐ.நா பாதுகாப்பு சபை கோரிக்கை

ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரும்படி மியன்மார் அரசை ஐ.நா பாதுகாப்புச் சபை மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கோரியுள்ளார்.

சுவீடன் மற்றும் பிரிட்டனின் கோரிக்கையை அடுத்து மூடிய அறையில் கூடிய 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபை, மியன்மார் நிலை குறித்து பொது கண்டனம் ஒன்றை வெளியிட இணங்கியுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடுவது இது இரண்டாவது முறையாகும்.

இந்த கூட்டத்திற்கு முன்னதாக உரையாற்றிய அன்டோனியோ குட்டரஸ், ரொஹிங்கிய அகதிகள் நிலை “ஏற்கமுடியாத சிக்கலானது’ மற்றும் ‘பேரழிவு’ கொண்டது என்று குறிப்பிட்டார். பெளத்த பெரும்பான்மை நாட்டில் இந்த சிறுமான்மை குழு இன அடிப்படையில் அழிக்கப்படுவதாக அவர் விபரித்துள்ளார்.

மியன்மாரின் மேற்கு மாநிலமான ரகினில் இருந்து அண்மைய வாரங்களுக்குள் சுமார் 370,000 ரொஹிங்கிய மக்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றிருப்பதாக ஐ.நா கூறுகிறது.

“இராணுவ நடவடிக்கையை இடைநிறுத்தி, வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து, நீதியின் ஆட்சியை நிறுவும்படியும் நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் அனைவரும் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் மியன்மார் நிர்வாகத்தை நான் கோருகிறேன” என்று நியூ யோர்க்கில் நடந்த ஊடக சந்திப்பில் ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.

“மியன்மாரின் நிலை இன அழிப்புக்கான ஓர் பாடநூல் உதாரணம்” என்று கண்டித்த ஐ.நா மனித உரிமை தலைவர் செயித் ராத் அல் ஹுஸைனின் கூற்றை பிரதிபலிப்பதாகவே குட்டரஸின் கருத்து இருந்தது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் மியன்மார் விடயத்தில் பாதுகாப்பு சபை வெளியிடும் முதல் அறிக்கை இதுவென்று ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதுவர் மத்தியு ரைகிரொப்ட் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ரொஹிங்கிய பிரச்சினையை கையாண்டது தொடர்பாக மியன்மாரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி மீது எழுந்துள்ள விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், அடுத்த வாரத்தில் நடக்கவுள்ள ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை குறித்து கருத்து தெரிவிக்காத காரணத்தால் ஆங் சான் சூச்சி மீது மேற்குலகில் உள்ள அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வரும் செப்டம்பர் 19 முதல் 25ஆம் திகதி வரை நியூ யோர்க்கில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் மியன்மாரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி பங்கேற்பதாக இருந்தார்.

No comments

Powered by Blogger.