Header Ads



ரோஹின்யா கிராமங்களிலிருந்து, தொடர்ந்து வெளிவரும் புகை

கிராமங்கள் மீது படையினர் ஆரம்பத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய பின், படையினருடன் வரும் பொதுமக்கள் கொள்ளையிடுவது மற்றும் வீடுகளை தீமூட்டுவதாக மியன்மாரின் ரொஹிங்கிய கிராமத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

பங்களாதேஷில் தஞ்சமடைந்திருக்கும் 20 முஸ்லிம்கள் தமது கிராமங்களில் இருந்து துரத்தப்பட்டது குறித்த அனுபவங்களை கூறியுள்ளனர்.

55 வயதான காதில் ஹுஸைன் என்பவர் கூறும்போது, “இராணுவத்தினர் சில ரகின் பெளத்தர்களை அழைத்து வந்து எமது கிராமத்தின் மீது தீ வைத்தார்கள். எமது கிராமத்தில் இருந்து சுமார் 10,000 முஸ்லிம்களும் தப்பி ஓடினார்கள். சிலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதோடு எஞ்சியவர்கள் இங்கு வந்தனர். அங்கு ஒருவர் கூட இல்லை” என்றார்.

ஏற்கனவே ஆயிரக்கணக்கான அகதிகள் தஞ்சமடைந்திருக்கும் குதபலொங் அகதி முகாமில் ஹுஸைன் அடைக்கலம் பெற்றுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி தொடக்கம் மியன்மாரில் இருந்து பங்களாதேஷில் அடைக்கலம் பெற்ற ரொஹ்கியாக்களின் எண்ணிக்கை 164,000 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில் கா முங் செய்க் என்ற கிராமத்தில் இருந்து தப்பி வந்தவர்களை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பேட்டி கண்டுள்ளது. அவர்கள் கொலைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது குறித்து விபரித்துள்ளனர்.

படையினர் வரும்போது ஆயிரக்கணக்கானவர்களுடன் காட்டுக்குள் ஒளிந்திருந்ததாக 28 வயதான பொதி அலோம் குறிப்பிட்டுள்ளார். தமது குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வயல்வெளிகளில் சடலங்களை கண்டதாகவும் தனது தாய் மற்றும் சகோதரர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருப்பதை கண்டதாகவும் அவர் கூறியுள்ளார். வயல்வெளியில் சடலங்களை கண்டதாக மேலும் இரு கிராமத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

“அங்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அவர்களை விட்டு விட்டு வந்தோம். அவர்களை புதைப்பதற்கும் வாய்ப்பு இருக்கவில்லை” என்று அலோம் கூறினார்.

கா முங் செய்க் கிராமம் மோதல் உக்கிரமடைந்த பகுதியிலேயே அமைந்துள்ளது. இங்கு ரொஹிங்கிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்வதோடு ரகின் பெளத்தர்கள் மற்றும் இந்துக்களும் உள்ளனர்.

கிராமத்திற்குள் அதிகாலையில் இராணுவம் நுழைந்து கண்டபடி சுட்டது தொடர்பில் கிராமமக்கள் சிலர் வெவ்வேறாக ரோய்ட்டர்ஸுக்கு கூறியுள்ளனர்.

“ஒளிந்து கொள்வதற்காக பெரும் கூட்டத்தினருடன் நானும் ஓட்டம் பிடித்தேன். பின்னால் திரும்பி பார்த்தபோது சிலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவதை கண்டேன்” என்று 28 வயது அபுல் ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மக்கள் தப்பிச் சென்ற வனப்பகுதி மீது இராணுவம் மோட்டார் குண்டுகள் மற்றும் எறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கிராமத்தினர் கூறினர்.

“மக்கள் கூட்டம் ஒன்றின் மீது மோட்டர் குண்டு விழுந்ததை கண்டேன். அந்த இடத்திலேயே சிலர் கொல்லப்பட்டார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்போது காட்டுப் பகுதியில் மறைந்திருந்தவர்கள் தமது வீடு பொதுமக்களால் கொள்ளையிடப்படுவது மற்றும் தீ வைக்கப்படுவதை கண்டுள்ளனர். மியன்மார் கிராமங்களில் புதிதாக தீ பரவி இருப்பதை பார்த்ததாக ஊடகவியலாளர் குழுவொன்று நேற்று வியாழக்கிழமை தகவல் அளித்துள்ளனர். இந்த வீடுகள் ரொஹிங்கிய முஸ்லிம்கள் கைவிட்டு சென்றவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட கிராமங்களை சுற்றிப்பார்த்த செய்தியாளர்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட ஐந்து கிராமங்களை கண்டுள்ளனர். பொலிஸார் மற்றும் ரகின் பெளத்தர்கள் இந்த வீடுகளுக்கு தீ வைத்ததாக அங்குள்ள கிராமத்தினர் ஒருவர் அந்த செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலதிய விபரங்களை அறியும் முன் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டதாக செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தீயில் கருகிய கட்டடங்களில் இஸ்லாமிய கல்வி புகட்டும் மத்ரசா ஒன்றும் இருந்துள்ளது. அங்கிருந்த அல் குர்ஆன் பிரதிகள் மற்றும் புத்தகங்கள் வெளியே வீசப்பட்டுள்ளன. அருகில் உள்ள பள்ளிவாசல் தீவைக்கப்படாமல் உள்ளது.

மற்றொரு கிராமம் தீயில் கருகி இருப்பதோடு அங்கிருந்து தொடர்ந்து புகை வெளிவந்த வண்ணம் இருப்பதாக செய்திகயாளர்கள் விபரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.