September 03, 2017

பயங்கரவாதி பக்தாத்தி, உயிருடன் உள்ளான் - அமெரிக்கா அறிவிப்பு

உலகை அச்சுறுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர், இப்ராகிம் அபு பக்கர் அல் பாக்தாதி (வயது 45). இவரை உயிரோடு பிடிப்பதற்கு அல்லது கொல்வதற்கு தகவல்கள் தருவோருக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) ரொக்கப்பரிசை அமெரிக்கா அறிவித்திருந்தது.

ஆனால் அவரை பிடிப்பது அமெரிக்காவுக்கு வசப்படவில்லை.

ஈராக்கில் மொசூல் நகரம் சுற்றி வளைக்கப்பட்டபோது, அல் பாக்தாதியும் அகப்பட்டுக்கொண்டு விட்டார் என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தனவே தவிர அது நடந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம், சிரியாவில் உள்ள ராக்கா நகரில் ரஷியாவின் சுகோய் போர் விமானங்கள் கடுமையான குண்டுவீச்சில் ஈடுபட்டன.

இந்த குண்டு வீச்சில் சிக்கி அல் பாக்தாதி கொல்லப்பட்டு விட்டார் என்று ரஷிய ராணுவம் அறிவித்தது. ஆனால் இதுபற்றி ஐ.எஸ். அமைப்பு வாய் திறக்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அல் பாக்தாதி, ரஷிய தாக்குதலில் கொல்லப்படவில்லை என்ற தகவலை அமெரிக்கா வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக, ஈராக், சிரியா நாடுகளில் ஐ.எஸ். அமைப்பினரை எதிர்த்து சண்டையிட்டு வருகிற அமெரிக்க படைக்கு தலைமை தாங்குகிற தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டீபன் டவுன்சென்ட், பாக்தாத்தில் இருந்து பென்டகனில் உள்ள நிருபர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அல் பாக்தாதி உயிருடன்தான் இருக்கிறார் என்பதை நான் நம்பத்தான் வேண்டுமா என்றால் ஆம் நம்பத்தான் வேண்டும். அவர் கொல்லப்படவில்லை.

அமெரிக்காவும், அதன் கூட்டுப்படைகளும், அல் பாக்தாதியை தீவிரமாக தேடி வருகின்றன. அவரை கண்டு, உயிரோடு பிடிப்பதை விட கொன்று விடுவார்கள்.

அல் பாக்தாதி எங்கே பதுங்கி இருக்கிறார் என்று கேட்டால் அவர் மத்திய யூப்ரடீஸ் நதிப்பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கி இருக்கக்கூடும். இது தெய்ர் எல் சோர் நகரம் தொடங்கி ராவா நகர் வரையிலும் நீளும்.

ராக்கா நகரைப் பொறுத்தமட்டில், தற்போது நடந்து வருகிற சண்டையில் பாதிக்கு மேற்பட்ட பகுதியை அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து இனத்தவர் தலைமையிலான சிரியா படைகள் மீட்டு விட்டன.

இன்னும் சண்டை தீவிரமாக நடக்கப்போகிறது.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சம்பவம் போன்று மீண்டும் ஒன்று நடந்துவிடாதபடிக்கு அமெரிக்க படைகள் கூடுதல் காலம் தங்கி இருக்கும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

2011-ம் ஆண்டு என்ன நடந்தது என்று பார்த்திருக்கிறோம். (அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்த காலத்தில், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு, அங்கு நிலைமை மோசமானதை இப்படி சுட்டிக்காட்டினார்.)

என் தனிப்பட்ட கருத்து, அது போன்று மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டீபன் டவுன்சென்ட், பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அடுத்த வாரம் அவர் இரண்டாம் பால் புங் என்பவரிடம் பொறுப்பை ஒப்படைக்க உள்ளார். 

2 கருத்துரைகள்:

Americaவிற்கு இன்னும் கொஞ்ச முஸ்ஸீம்மை கொன்று ஹூஸ்டனில் ஏற்ப்பட்ட உயிர் சேதத்தை சரி செய்ய போடும் நாடகம் தான் இது.

ISIS is not muslim group. .....they are American......

Post a Comment