Header Ads



கத்தார் தடுமாறுகிறதா..?

மற்ற அரபு நாடுகளுடன் ஏற்பட்ட பிரச்னையின்போது கத்தார் தனது பொருளாதாரத்தை காக்க உதவும் வகையில் சுமார் 38 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக ஒரு மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தாரின் மீது விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக அந்நாட்டின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் வங்கி ஆகிய துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டன என்று சர்வதேச நிதி நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

இதுவரை கத்தாரின் வங்கித்துறையில் இருந்து சுமார் 30 பில்லியன் டாலர் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தார் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி, அதன் அண்டை நாடுகள் கத்தாருடனான தொடர்பை துண்டித்தன.

தீவிரவாத குழுக்களை தாங்கள் ஊக்குவிப்பதாக கூறுவதை மறுக்கும் கத்தார், இந்நெருக்கடி நிலைக்கு அரசியல் உந்துதலே காரணம் என்று தெரிவித்துள்ளது.

செளதி அரேபியா தலைமையிலான அக்கூட்டணி நாடுகள் கத்தாருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக கடந்த ஜூன் 5ம் தேதி அறிவித்தது.

 கத்தாரின் தேசியக்கொடியும் கத்தாருக்கு உதவும் நோக்கில் செயல்படும் கப்பல் போக்குவரத்துக்கும் பல துறைமுகங்களில் தடை செய்யப்பட்டது;

மேலும், பெரும்பான்மையான கத்தார் வான்வெளியும் மூடப்பட்டதால் கத்தார் வரும், செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மற்றும் பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கத்தார் பிரச்சனையின்போது பொருளாதார நிலைமையை பாதுகாப்பதற்கான தகுந்த மூலங்கள் இருப்பதாக கத்தார் கூறினாலும், சரியான தீர்வு எட்டப்படாததால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

கத்தாரின் தேசிய பங்கு சந்தை தனது 15% சந்தை மதிப்பை 100 நாட்களில் இழந்து 52 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை கண்டது.

சில வளைகுடா நாடுகளின் கடனாளிகள் தங்களுடைய வைப்புகளைச் சுமக்க வேண்டாம் என விரும்பியதால், கத்தாரின் வங்கிகள் அதிக நிதி செலவினங்களை எதிர்கொண்டன.

கத்தார், இந்த பிரச்சனையின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் தனது பொருளாதாரத்தை காக்க உதவுவதற்காக சுமார் 38.5 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளதாகவும், அது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதம் என்றும் மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

இப்பிரச்சனையானது வளைகுடா நாடுகள் முழுவதும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது என்றும் அதில் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளின் கடன் பார்வையை இது எதிர்மறையாக பாதிக்கும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், வளைகுடா நாடுகளுக்கிடையே ஏற்பட்ட இந்த ராஜாங்க ரீதியிலான மோதலானது GCC என்னும் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் மீது பொருளாதார, நிதி மற்றும் சமூக தாக்கத்தை பற்றிய நிச்சயமற்ற தன்மையை விரிவுபடுத்துகிறது" என்று மூடிஸின் துணைத் தலைவர் ஸ்டீபன் டைக் கூறினார்.

"வளைகுடா கூட்டுறவு கவுன்சில் தங்களுக்குள் நிலவும் பிரிவுகள், அதிகரிக்கும் அல்லது பெருகி வரும் பதட்டத்தை தவிர்க்க தவறினால் அது கத்தார் மற்றும் பஹ்ரைனுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்."

அதிகரிக்கும் கடன் அளவு, அதிகமாகி வரும் மற்ற வளைகுடா கூட்டுறவு கவுன்சில் நாடுகளிடமிருந்து பெற்ற கடன் அளவு மற்றும் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் அமெரிக்காவால் ஏற்பட்ட அழுத்தம் என்று 2014ம் ஆண்டிலிருந்தே பஹ்ரைனின் நிதி செலவுகள் அதிகரித்து வருவதாக மூடிஸ் தெரிவித்துள்ளது. bbc

No comments

Powered by Blogger.