Header Ads



வியட்னாம் தீவில், சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை இராணுவத் தளபதிகளும், அவர்களின் மனைவிமாரும்,

சிறிலங்காவின் ஓய்வுபெற்ற மூத்த படைத் தளபதிகளும் அவர்களின் மனைவிமாரும், வியட்னாமில் உள்ள தீவு ஒன்றில் கடந்த வாரம் தடுத்து வைக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிநிலையில் இருந்து ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த, நான்கு நட்சத்திர ஜெனரல்கள் இருவர் உள்ளிட்ட மூத்த படை அதிகாரிகள் மற்றும் அவர்களின் மனைவிமார் என 65 பேர், வியட்னாமுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

சைகூனில் உள்ள மூன்று நட்சத்திர விடுதி ஒன்றில் தங்குமிட வசதிகளுடன், இந்தப் பயணத்துக்கு, 120,000 ரூபாவை பயண முகவர் அறவிட்டிருந்தார்.

இதையடுத்து, முன்னாள் படை அதிகாரிகள் மற்றும் அவர்களின் மனைவிமார் என 65 பேர் ஹனோய் சென்று மூன்று நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். அங்கிருந்து சாய்கூனில் உள்ள தீவு ஒன்றிலுள்ள சிறிய தீவில் உள்ள விடுதிக்கு கடந்தவாரம் சென்றனர்.

எனினும், அவர்களுக்கு அங்கு தங்குவதற்கு விடுதி நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. ஆளுக்குத் தலா 100 டொலரை செலுத்தாவிடின், தீவை விட்டு வெளியேறுவதற்கு படகு தர முடியாது என்றும் விடுதி நிர்வாகம் கூறியுள்ளது.

பயண முகவர் பின்னர், கட்டணத்தை செலுத்துவார் என்று முன்னாள் படை அதிகாரிகள் கூறிய போதும், விடுதி நிர்வாகம் அதனை நிராகரித்து விட்டது.

தீவை விட்டு வெளியேறுவதானால், 100 டொலர்களை செலுத்த வேண்டும் என்று அவர்களின் கடவுச் சீட்டை வைத்துக் கொண்டு விடுதி நிர்வாகம் மிரட்டியுள்ளது.

இந்த நிலையில், அவர்கள்  வியட்னாமில் உள்ள சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்பு கொண்டு முறையிட்டனர். இதையடுத்து, சிறிலங்கா தூதரகம் தலையிட்டு,கட்டணம் செலுத்துவதற்கு தாம் பொறுப்பேற்பதாக கூறியதையடுத்து, அனைவரும் விடுவிக்கப்பட்டு, கடந்தவார இறுதியில் கொழும்பு திரும்பினர்.

இந்தக் குழுவில் இருந்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி  ஜெனரல் சிறிலால் வீரசூரிய இதுகுறித்து இராணுவத் தலைமையகத்திடமும் வெளிவிவகார அமைச்சிடமும் முறையிட்டதை அடுத்து,  உடனடியாகவே, சம்பந்தப்பட்ட பயண முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை இந்தப் பயணத்தின் போது, சுற்றுலா சென்றவர்களில் ஒருவரின் தங்கச் சங்கலி, ஹனோயில் திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது,

அதேவேளை, விடுதி பணியாளர்களால் தாம் மனிதாபிமானமற்ற முறையில் அவமானப்படுத்தப்பட்டதாக, முன்னாள் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.