Header Ads



டிசம்பரில் கிழக்கு மாகாண தேர்தல் நடைபெறுமா..? ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாளுக்குப் பின்னரே நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்காவின் தேர்தல்கள்ஆணைக்குழு  தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரி்வித்தார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“ கபொத சாதாரண தரத் தேர்வுகள் நடக்கவிருப்பதால், உள்ளூராட்சித் தேர்தலை இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடத்த முடியாது. டிசெம்பர் 9ஆம் நாள் மாத்திரம் பயன்படுத்தக் கூடியதாக இருந்தாலும்,  அன்றைய நாளில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

டிசெம்பர் 30, 31ஆம் நாள்களில் தேர்தலை நடத்துவதற்குச் சாத்தியம் இல்லை. ஏனென்றால், அரச நிறுவனங்கள், இந்த ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையை ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதனால் அரச பணியாளர்கள் விடுமுறை எடுக்க முடியாது.

ஜனவரி நடுப்பகுதியில் தான் ஒரு நாள் இருக்கிறது. ஆனால் தைப்பொங்கல் என்பதால் அதையும் தேர்தல் நடத்தப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. அதற்குப் பின்னர் ஜனவரி 20 ஆம் நாளே  தேர்தலை நடத்த முடியும்.

40/60 என்ற கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு, நாடாளுமன்றத்தில் மாநகர, நகர, பிரதேசசபை கட்டளைச் சட்டங்களை திருத்த வேண்டியுள்ளது.

வரும் ஒக்ரோபர் 2ஆம் நாளுக்குள் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்படாவிடின், கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் திணைக்களம் வெளியிடும்.

ஒக்ரோபரில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், டிசெம்பர் 6ஆம் நாள், மூன்று மாகாணசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். எவ்வாறாயினும், இதுபற்றி பரீட்சைகள் ஆணையாளரின் கருத்துக்களும் கோரப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.