Header Ads



காசாவின் கட்டுப்பாட்டை, இழக்கும் ஹமாஸ்..?

காசாவில் ஹமாஸ் அரசை கலைப்பதன் மூலம் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அங்கு கடைப்பிடிக்கும் தடைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

எகிப்தின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற சமரச பேச்சுவார்த்தையை அடுத்தே காசா நிர்வாகத்தை கலைக்க ஹமாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இணங்கியது. இதன்மூலம் அந்த பகுதி ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காசாவுக்கான நிவாரணங்கள் பற்றிய உறுதிப்பாட்டை அடுத்தே ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹமாஸின் கடந்த ஒரு தசாப்த ஆட்சியில் இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காசா பகுதி இஸ்ரேலோடு மூன்று யுத்தங்களை எதிர்கொண்டிருப்பதோடு எகிப்துடன் முறுகலை கொண்டுள்ளது. எனினும் அதிகார பகிர்வு முறையொன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

“நாம் நடைமுறை சாத்தியம் கொண்ட தளத்தில் இருந்த தீர்மானித்திருக்கிறோம். காசா நிர்வாகக் குழு தொடர்ந்தும் இயங்காது. புதிய ஐக்கிய அரசு ஒன்றை ஏற்படுத்த நாம் தயாராக இருக்கிறோம்” என்று ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியாஹ் குறிப்பிட்டார்.

அப்பாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி குறிப்பிட்டதாக கெய்ரோவில் இருந்து காசா திரும்பிய பின் ஹனியாஹ் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். “தடைகளை முடிவுக்கு கொண்டு வந்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எமது மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்” என்று அப்பாஸிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அப்பாஸின் பலஸ்தீன அதிகார சபை காசாவின் மின்சார விநிகோத்திற்கான நிதியை கடந்த ஜுன் மாதம் தொடக்கம் நிறுத்தியது. இதனால் காசா பகுதியில் நாளொன்றுக்கு நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவே மின்சாரம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று காசாவின் 60,000 பணியாளர்களுக்கான சம்பளத்தில் 30 வீத குறைப்பையும் அப்பாஸ் செய்தது. 

No comments

Powered by Blogger.