September 19, 2017

கோரப் பசியுடன் ரோஹின்யர்கள், சிலர் வபாத், மழையும் வாட்டுகிறது

மியன்மார் எல்லையை ஒட்டிய பங்களாதேஷின் கொக்ஸ் பசாரில் அடைக்கலம் பெற்றிருக்கும் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான ரொஹிங்கிய அகதிகள் டிரக் வண்டிகளில் இருந்து உணவுப் பொருட்கள் வீசி எறியப்படும் வரை முண்டியடித்து காத்திருக்கின்றனர்.

உள்ளுர் பங்களாதேஷ் மக்கள் விநியோகிக்கும் உணவு, உடைகளை பெறுவதற்காக பெண்கள், குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி காத்திருக்கின்றனர்.

பெரும் எண்ணிக்கையான ரொஹிங்கிய மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பலுகாலி பகுதியில் தற்போது மழைபெய்து வரும் நிலையில் அங்குள்ள அகதிகள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.

மோசமான நிலை காரணமாக ரொஹிங்கிய அகதிகள் பெரும் சிரமங்களை சந்திக்கும் நிலையில் இரு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் உதவிப் பொருட்களை பெரும் நெரிசலில் சிக்குண்டு மரணித்ததாக உதவி நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தன.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வரை காத்திருக்கும் நூற்றுக்கணக்கான அகதிகளில் அரெபாவும் ஒருவராவார். அந்த பெண் தனது இரண்டு வயது குழந்தையை சுமந்தபடி மழையில் காத்திருக்கிறார். தனது இரு குழந்தைகள் மற்றும் தனக்கு உணவில்லாமல் காத்திருப்பதாக அவர் கூறினார்.

“என்னிடம் உணவு, இருப்பிடம், உணவு தயாரிக்க பொருட்களோ எதுவும் இல்லை. இதுவரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்று அவர் அழுதபடி குறிப்பிட்டார். “உணவு கிடைத்தால் உண்பேன், இல்லையென்றால் பசியில் காத்திருப்பேன்” என்று அவர் கூறினார்.

மியன்மாரின் அக்யப் மாவட்டத்தில் உள்ள லம்பாகுனா என்ற கிராமத்தில் இருந்து இரு தினங்களுக்கு முன்னரே அரெபா வந்துள்ளார். அவர் தனக்கு 40 வயது என்று கூறியபோதும் தோற்றத்தில் இளமையானவர் போல் தெரிகிறார். தனது கணவர் நபி ஹுஸைன் மியன்மார் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கான தற்காலிக கூடாரம் ஒன்றை அமைத்துக் கொள்ளும் வரை அரெபாவுக்கு சக ரொஹிங்கியர் ஒருவர் தனது தார் துணியாலான குடியிருப்பில் அடைக்கலம் வழங்கியுள்ளார். எனினும் உதவிப் பொருட்களை பெறுவதில் அவர் போதிய அதிர்ஷ்டம் இல்லாதவராகவே காத்திருக்கிறார்.

அளவுக்கு அதிகமான அகதிகள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் பதிவு செய்யப்பட்ட முகாம்களில் போதிய இடவசதி இல்லாததால் அவர்கள் திறந்த வெளி பகுதிகளில் மூங்கில்கள் மற்றும் தார் துணிகளை கொண்டு கூடாரங்கள் கட்டி தங்கி வருகின்றனர். இவ்வாறு கிட்டத்தட்ட 326,700 பேர் தற்காலிக கூடாரங்களில் தங்கி வருவதாக குறிப்பிட்ட மனிதாபிமான அமைப்புகள் இவர்களுக்கு தங்குமிடங்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டது.

பங்களாதேஷ் உள்ளுர் வாசி ஒருவர் வழங்கிய தனியார் இடத்தில் கூடாரம் அமைத்திருக்கும் மன்சூர் அஹமது, தனது தங்குமிடம் தண்ணீரில் மூழ்கியதாக குறிப்பிட்டார். “எமது இருப்பிடத்திற்குள் நீர் நுழைந்துவிட்டது. எமக்கு உறங்குவதற்கு இடமில்லை. எனது மூளை வேலை செய்யவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை” என்று கூறினார்.

சேறும் சகதியுமாக உள்ள குறுகிய வீதிகள் ஊடாக தற்காலிக கூடாரங்களை அமைக்க பல அகதிகளும் மூங்கில்களை சுமந்து செல்கின்றனர். மழை காரணமாக உதவி விநியோகங்களும் தாமதித்துள்ளன. உதவி விநியோகங்கள் ஒழுங்கு முறைப்படி இடம்பெறவதில்லை என்ற உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையை ஈடுகட்டப் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், தொற்றுநோய்கள் பரவத் ஆரம்பித்துள்ள.

கூட்ட நெரிசலால் அகதிகள் காயமடையும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. குறுகலான இடவசதி, உணவுப் பற்றாக்குறை, அசுத்தமான தண்ணீர், போதிய கழிப்பறை வசதி இல்லாதது ஆகிய காரணங்களால், நிலைமை நாளுக்குநாள் அங்கு மோசமாகிவருகிறது.

அகதி முகாம்களில் உள்ள 16 சிறுவர்களுக்கு இளம்பிள்ளைவாதம் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவு மூலம் எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய் அது என மருத்துவத் தொண்டூழியர்கள் எச்சரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சுமார் 150,000 பிள்ளைகளுக்கு இந்த வாரம் தடுப்பூசிகள் போடப்படும் என, புலம்பெயர்வோருக்கான அனைத்துலக அமைப்பு அறிவித்துள்ளது. நிவாரண உதவி வழங்கப்படும் போது ஏற்படும் கூட்ட நெரிசலில் பலர் காயமடைகின்றனர்.

சளிக்காய்ச்சல், தலைவலி ஆகிய சராசரி நோய்களுக்கு நிவாரணம் வழங்கும் மருந்துகள் மட்டுமே முகாம்களில் கிடைக்கின்றன. கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப் போதுமான மருத்துவ வசதி இல்லை. அகதி முகாம்களுக்கு வரும் முன்னர், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் மருத்துவ உதவியை நாடத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. அவர்களும் காயத்தால் அவதியுற்று வருகின்றனர்.

அதிகரித்து வரும் மருத்துவத் தேவையை ஈடுகட்ட நடமாடும் மருந்தகங்களும், மருத்துவப் பரிசோதனை நிலையங்களும் நிறுவப்பட வேண்டும் என்று உதவி அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன. 

0 கருத்துரைகள்:

Post a Comment