September 26, 2017

இன்றைய பௌத்தம் இனச்சுத்திகரிப்பு செய்கிறது, விகாரை திறப்பில் ஜனாதிபதி பங்கேற்றால் கறுப்புக்கொடி


மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் 
திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று  திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே இவ்வாறு  கேள்வி எழுப்பியுள்ளார். அக்கடிதத்தில்  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

1991 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பகுதியை இராணுவம் கைப்பற்றிய போது தமது வழிபாட்டுக்கு என அமைக்கப்பட்டது தான் இந்த பௌத்த விகாரை.

 2009 ஆம் ஆண்டிற்கு  பின்னர் இராணுவம் அங்கிருந்து பிரதான படை முகாமை அகற்றிய போதும், இந்த பௌத்த விகாரையையும் பௌத்த மதகுருவையும் பாதுகாப்பதற்கு சிறிய இராணுவ முகாம் அமைத்து பாதுகாத்து வருகிறது. எனவே இராணுவத்தின் ஒத்துழைப்புடனேயே பௌத்த விகாரை அமைப்பு நடை பெறுகின்றது.

வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் சூழலில் இச்செயற்பாடு ஏற்புடையதா? 18.01.2012 இல் பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் இந்த விகாரையின் பதிவை இரத்து செய்ததுடன் கட்டுமானப் பணிகளையும் நிறுத்தியது. ஆனால், உங்கள் நல்லாட்சியில் தான் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

இது சட்ட விரோத ஜனநாயக மீறல் அல்லவா? இதுவா நல்லாட்சி? தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் கலாசார மாற்றத்தை ஏற்படுத்தி போலியான புனைவு பெயர்களின் மூலம் பௌத்த மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னகர்த்துகிறீர்களா?

எப்படி கதிர்காமத்தை சிங்கள முருகன் ஆக்கினீர்களோ அதே போல் காலப்போக்கில்   திருக்கேதீஸ்வரத்தை சிங்கள    சிவனாக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறீர்களா? இது தானா பௌத்த தர்மம்? புத்த பெருமானின் தர்ம சிந்தனைக்கு எதிராக செயற்படுவது தான் இன்றைய பௌத்த  சிந்தனையா?

பாவம் புத்தர் உயிரோடு இருந்திருந்தால் உங்கள் எல்லோரையும் அழித்து விடுவார். புத்த பெருமானின் தர்ம சிந்தனைகள் உலக நீதிக்கு வழிகாட்டின.  ஆனால் இன்றைய பௌத்தம் இனச்சுத்திகரிப்பு செய்கிறது.

சட்ட விரோதமாக தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட சட்ட விரோதமான  விகாரையை திறப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய நீங்கள் உங்களை தெரிவு செய்த மக்களின் விருப்புக்கு மாறாக திறப்பு விழாவிற்கு வருவது தார்மீக அடிப்படையில் நியாயம் தானா? என உங்கள் மனச் சாட்சியிடம் கேளுங்கள். தமிழ் மக்களின் அறம் சார்ந்த போராட்டத்தை தான் அடியோடு அழித்து விட்டீர்கள்.

 இனம் சார்ந்த உணர்வையும் நசுக்கி விடப்போகிறீர்களா?. நீங்கள் தமிழ் தலைமைகளை ஏமாற்றலாம். ஆனால், தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். நீங்கள் உண்மையில் அறம் பேசுபவராக இருந்தால் சட்ட விரோத விகாரை திறப்பு விழாவிற்கு வருவது ஏற்புடையது அல்ல .

உடனடியாக பணிகளை நிறுத்த  வேண்டும். எக்காலத்திலும் பௌத்தர்கள் வசிக்காத இடத்தில் எதற்கு விகாரை? திருக்கேதீஸ்வரப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியின்றி ஒரு சிறு குழியைக்கூட அகழ முடியாது.
 ஆனால், விகாரை கட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது? இது தானா பௌத்த ஜனநாயகம்? 

மேட்டிமை வாத மேலாதிக்கத்தை தான்தோன்றித்தனமாக தமிழர் பிரதேசத்தில் இராணுவ உதவியுடன் செயற்படுத்திக்கொண்டு உலகத்தை ஏமாற்ற உதட்டளவு நல்லிணக்கம் பேசுகிறீர்களே! எப்படி நல்லிணக்கம் ஏற்படும். எனவே இந்த சட்ட விரோத விகாரை திறப்பு விழாவில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நீங்கள் கலந்துகொள்வது ஏற்புடையது அல்ல.

எமது நியாய பூர்வமான வேண்டுகையை புறக்கணித்து குறித்த திறப்பு விழா நடை பெற்றால் ஜனநாயக ரீதியில் கறுப்புக் கொடியேந்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதையும் தங்களுக்கு வினயமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2 கருத்துரைகள்:

Very reasonable request. Sri Lanka is for all to live peacefully not for one race only.

MY3 is silently staging their objectives.. But Matilda did it openly...

Post a Comment