Header Ads



அரசியலுக்குள் வரமாட்டேன் - ஜனாதிபதி, பிரதமர் முன் சதுரிக்கா அறிவிப்பு

கட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு கிடையாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.

சதுரிக்கா சிறிசேன, தனது தந்தையின் அரசியல் வரலாற்றை ‘ஜனாதிபதி தாத்தா’ (அதிபர் தந்தை) என்ற பெயரில் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.

நேற்று இந்த நூல் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய சதுரிக்கா சி்றிசேன, 

“ கட்சி அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், சமூக சேவை, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சமூக நீதி என்பனவற்றுக்கு அரசியலைப் பயன்படுத்துவேன்.

எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்று எனது நண்பர்கள் உள்ளிட்ட பலர் என்னிடம் கேட்கின்றனர். நான் அரிஸ்டோட்டில் கூறியதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.

மனிதன் ஒரு அரசியல் விலங்கு என்று அவர் கூறியதுடன் நான் உடன்பட்டாலும், அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. ஆனால் சமூக சேவைகளில் ஈடுபடுவேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.

சதுரிக்கா சிறிசேன தீவிர அரசியலுக்குள் நுழையவுள்ளதாகவும், அவருக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.