Header Ads



ரோஹின்யா முஸ்லிம்கள் பற்றிய, இலங்கையின் கொள்கை என்ன..?

ஒரு விடயத்தில் இவ்வரசின் ஆட்சியாளர்கள் ஆளுக்கொரு கொள்கையை கடைப்பிடிப்பதை ரோஹிங்ய முஸ்லிம்கள் விடயத்திலும் காட்டியுள்ளதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இலங்கையில் பல கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து கூட்டாட்சி செய்வதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இலங்கையில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள கட்சிகளிடையே ஒரு விடயத்தில் ஒரு கொள்கை கடைப்பிடிக்கப்படுவதாக காணக்கிடைக்கவில்லை. ஒரு விடயத்தில் ஒரு கொள்கையை கடைப்பிடிக்க முடியாமல் போனால் கூட்டாட்சி என்ற ஒன்று அமையப்பெற்றதில் எந்த இலாபமுமில்லை. அது கூட்டாட்சியினுடைய பண்புமில்லை.

ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான விசா தடை, கண்டனம் தெரிவிக்காமை போன்ற விடயங்கள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியை தோற்றுவித்திருந்தது. அண்மையில் பாராளுமன்றத்தில் வைத்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்ததோடு அவர்களுக்கு உதவி செய்யவும் தயார் என்ற அறிவிப்பை விடுத்திருந்தார்.

இவரின் அறிவிப்பின் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக யூகிக்க முடிகின்ற போதும் அது முஸ்லிம்களுக்கு மகிழ்வை அளித்திருந்தது. இவரது இந்த அறிவிப்பானது வார்த்தை ரீதியான மகிழ்வை கொடுத்திருந்தாலும் செயல் ரீதியான மகிழ்வை கொடுத்திருக்கவில்லை. இந்த அறிவிப்பு வந்த மறு நாள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரோஹிங்ய மக்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை போன்ற கடுந் தொனியிலான கருத்தை வெளியிட்டிருந்தார்.

வெளிவிவகார அமைச்சர் உதவ போகிறார், பிரதமர் கண்டிக்கின்றார் என்றால்  ரோஹிங்ய மக்கள் விடயத்தில் இவ்வரசின் கொள்கை தான் என்ன? இனவாதத்தையும் இனவாதிகளையும்  அடிப்படையாக கொண்டு ஆட்சி செய்யும் இவ்வரசால் ஒரு போதும் ரோஹிங்ய மக்களுக்கு உதவ முடியாது. ரோஹிங்ய மக்களுக்கு சார்பான நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுத்தாலும் சரி எடுக்காவிட்டாலும் சரி முதலில் ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். ஆளுக்கொரு நிலைப்பாட்ட வெளிப்படுத்துவதன் மூலம் ஆளுக்கொருவரை இலங்கை ஆட்சியாளர்கள் யாரை திருப்தி செய்ய முனைக்கின்றார்களோ தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது..

No comments

Powered by Blogger.