Header Ads



ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி, அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

மியன்மார் அகதிகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களையே பின்பற்றுவதாக உள்ளக விவகாரங்கள் அமைச்சு அறிக்கையொன்றை விடுத்து விளக்கமளித்துள்ளது.

உள்ளக விவகாரங்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அதனை வௌியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களம் மூலமாக ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் இலங்கை பின்பற்றும் நடைமுறை குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மூன்று படகுகளில் மியன்மார் ரோஹிங்யா அகதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களை கைது செய்து அரசாங்கம் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது.

எனினும் குறித்த அகதிகளை பொறுப்பேற்க ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் முன்வந்துள்ளதால் சட்டரீதியான செயற்பாடுகளின் பின்னர் அகதிகள் அந்த அமைப்பிடம் கையளிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு பொறுப்பேற்கப்பட்ட அகதிகளில் இரண்டு கட்ட அகதிகள் வேற்று நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர். அண்மையில் இலங்கை வந்தடைந்த ரோஹிங்யா அகதிகள் குழு மாத்திரம் தற்போதைக்கு யூ.என்.எச்.சி.ஆர்.பராமரிப்பில் உள்ளனர் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளின் அடிப்படையில் செயற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.

மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் நீண்ட காலமாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் அண்மைய நாட்களில் வெளியான தகவல்கள் தொடர்பில் பதிலளிக்கும் நோக்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு, 2013ஆம் ஆண்டு மற்றும் இந்த ஆண்டிலும் புகலிடம் தேடிச் செல்லும் வழியில் கடலில் தத்தளித்த ரோஹிங்யா முஸ்லிம்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தொடர்பில் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்தது கிடையாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.