Header Ads



ஆங்சான் சூகியின் அரசுக்கும், நல்லாட்சிக்கும் என்ன வித்தியாசம்...??

-வை எல் எஸ் ஹமீட்-

நாட்டின் இனவாதத் தீ சுவாலைவிட்டு எரிய ஆரம்பித்திருக்கின்றது. இறைவன் பாதுகாக்க வேண்டும், நிலமை எந்தமட்டத்திற்கு போகும் என்று தெரியாத பதட்ட சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த நான்கு வருடங்களுக்குமேலாக முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் புதிய பரிணாமம் எடுத்த நிலையில் அதனைக் கட்டுப்படுத்த எதனையும் செய்யமுடியாத கையறு நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆட்சியை மாற்றியும் பலன் எதுவுமில்லை.

மியன்மார் அனுபவம் இலங்கை இனவாதிகளுக்கு ஒரு புத்தூக்கத்தை அளித்திருக்கின்றது. மியன்மாரில் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை எவ்வாறு இலங்கையிலும் நிகழ்த்தலாம்; என்பதற்கான ஒரு களநிலை உருவாக்கத்திற்கு இனவாதிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்வது புரிகின்றது.

ஆங்சான் சூகியின் அரசுக்கும் நமது நல்லாட்சி அரசுக்கும் என்ன வித்தியாசம்?

அங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகளை அரசு கண்டும் காணாமல் இருக்கின்றது; அல்லது ஒத்துழைப்புக் கொடுக்கின்றது. இங்கும் அதைத்தான் நல்லாட்சி அரசு செய்கின்றது. ஒரேயொரு வித்தியாசம் மியன்மாரில் நடக்கும் கொடுமைகளின் அளவுக்கு நம்நாட்டின் நிலைமைகள் இன்னும் செல்லவில்லை. அந்த நிலைமைக்கு கொண்டுசெல்லத்தான் இனவாதிகள் முயற்சிக்கின்றார்கள்.

இறைவன் பாதுகாக்க வேண்டும்; அவ்வாறான ஒருநிலை ஏற்பட்டு இன்று இவ்வரசு பாரமுகமாக இருப்பதுபோல் அன்றும் இருந்துவிட்டால்? நினைத்துப் பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கின்றது.

நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஐ நா நிறுவனத்தின் அனுசரணையில் பராமரிக்கப்படுகின்ற அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்காமல் அவர்களைத் தாக்க வந்தவர்களைக் கைதுசெய்யாமல், அவர்கள் இருந்த வீட்டைத் தாக்கமுற்பட்டவர்களைக் கைதுசெய்யாமல் ' கைது செய்யவில்லை, அழைத்துச் சென்றோம்; என்ற பெயரில் அந்த அகதிகளைக் கைதுசெய்து அவர்களில் சிலரை பூசா முகாமிலும் அடைத்து வைத்திருக்கிறது.

முஸ்லிம்களை மிகமோசமான வார்த்தைகளால் தூசிக்கின்றார்கள். பொலிசார் வேடிக்கை பார்க்கின்றார்கள். ஞானசாரர் ஒரு மதகுரு என்று ஒருபுறம் வைத்துக் கொள்வோம். டான் பிரசாத் யார்? அவரைக் கைதுசெய்வது என்ன பிரச்சினை. ஒரு முறை கைதுசெய்யயப்பட்டதற்கே பொதுபலசேனாவைக் கைவிட்டு ஓடியவன் அவன். அவனையும் அவனது சில சகாக்களையும் கைதுசெய்தாலே இந்தப் பிரச்சினையை ஓரளவு கட்டுப்படுத்தலாம். பௌத்தர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது; என்பதற்காக எவ்வாறு மியன்மார் அரசு ஓரபட்சமாக நடக்கின்றதோ அதே நிலைதான் இலங்கையிலும் காணப்படுகின்றது. முஸ்லிம்களை கண்டுகொள்ளவே அரசு தயாராயில்லை. ஏன் கண்டுகொள்ள வேண்டும்.

தங்களது கண்களைக் குத்துவதற்கே தங்களது விரல்களைத் தருபவர்கள் இலங்கை முஸ்லிம்கள். இல்லையென்றால், ' தமது அடிப்படை உரிமையான வாக்குரிமை என்பது அரசியலில் தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான உரிமையாகும். அந்தப் பிரதிநிதித்துவத்தில் உள்ளூராட்சிசபைகளிலும் மாகாணசபைகளிலும் பாதிக்குமேல் எதிர்காலத்தில் இழக்கப்போவதற்கு கைஉயர்த்தி சம்மதம் தெரிவிப்பார்களா? எனவே முஸ்லிம்களுக்கு எதுநடந்தாலும் அரசுக்கு எந்தத்தாக்கத்தையும் 22 முஸ்லிம் பிரதிநிதித்துவங்களும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது அரசுக்குத் தெரியும். எனவே அரசு முஸ்லிம்களைக் கண்டுகொள்ளப் போவதில்லை. 

அவசரத்தேவை முஸ்லிம் சிவில் தலைமைத்துவ சபை

அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை, ஒரு புதிய பாதையை முஸ்லிம் சமூகம் தேர்வுசெய்கின்றவரை நாம் காத்திருக்க முடியாது. எனவே உலமாக்கள், புத்திஜீவிகள், எந்த அரசியல்வாதிகளுக்கும் தலைசொறியாத, எந்த அதிகாரத்திற்கும் அஞ்சாதவர்களைக்கொண்ட ஒரு சிவில் தலைமைத்துவசபை அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். 

அந்தசபையின் கீழ் சில ஆலோசனை சபைகள் உருவாக்கப்பட வேண்டும். அரசியல் விவகாரம், அரசியல்சட்ட விவகாரம், சமூகவிவகாரம் போன்ற பலவிடயங்களில் ஆலோசனைசபைகள் விரிவான கலந்தாலோசனைசெய்து மேற்படி தலைமைத்துவ சபைக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அவ்வாறான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தலைமைத்துவசபை சமூகம்சார்ந்த விடயங்களில் தீர்மானம் எடுத்து அரசியல்கட்சிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழிகாட்டுதல்கள் மட்டுமல்ல தேவைப்படும்போது உத்தரவிடுகின்ற மக்கள் அதிகாரம் அந்தசபைக்கு வழங்கப்படல் வேண்டும்.

இந்த அதிகாரம் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஜும்ஆத்தொழுகையின்பின் தீர்மான அங்கீகாரம் மூலம் பெறப்பட வேண்டும்.

உதாரணமாக, அண்மையில் இடம்பெற்ற சட்டமூலம்போன்ற ஒருவிடயத்தில் அந்த தலைமைத்துவசபை ஒரு தீர்மானத்தை எடுத்தால் அத்தனை கட்சிகளும் பிரதிநிதிகளும் அதற்குக் கட்டுப்பட வேண்டும். அவ்வாறு கட்டுப்படாதவர்களை சமூகம் புறந்தள்ள வேண்டும். அதற்காக, ஒவ்வொரு சட்டமூலத்திலும் அல்லது அரசியல்வாதிகளின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் தலையிட வேண்டுமென்பதல்ல. சமூகத்தின்மீது அதீத தாக்கத்தைச் செலுத்தக்கூடிய விடயங்களில் தலைமைத்துவசபை தலைமைத்துவம் வழங்க வேண்டும். 

தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்கின்றநிலை மாற்றப்பட வேண்டும்.
இன்று ஆர்ப்பாட்டம் செய்யப்போய்க் கொடிபிடித்தவர்கள் நாளை சமூகத்திற்கு ஒரு ஆபத்துவரும்போது தீர்வுதருவார்களா? அவர்களும் தங்கள் பங்கிற்கு அரசியல் தலைமைத்துவங்களை  ஏசுவார்கள். அரசியல் தலைமைத்துவங்களின் கையாலாகத்தனத்தைத் தெரிந்துகொண்டு நாம் எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றிவிட்டு அரசியல்வாதிக்கு ஏசி பிரயோசனமில்லை. ஒருசில உசார்மடையர்களின் செயற்பாட்டினால் மொத்த சமுதாயமும் பலிக்கடாவாக முடியாது.

எனவே, இந்த தலைமைத்துவசபை அமைக்கின்ற விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில், தேசிய சூறாசபை, வை எம் எம் ஏ மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழகம், பிராந்திய அமைப்புகள், குறிப்பாக கிழக்கிலங்கையிலுள்ள பிரதான அமைப்புகள் இவை எல்லாவற்றுடன் நாட்டின் பள்ளிவாசல் சம்மேளனங்கள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். இன்று நாம் சந்திக்கின்ற பிரச்சினைகளை எவ்வாறு முகம்கொடுக்கப் போகின்றோம்; என்பது தொடர்பாக   நாம் சிறப்பான ஒரு திட்டமிடலுடன் ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

நிலைமை கட்டுமீறிப் போய்க்கொண்டிருக்கின்றது. தாமதம் நிலைமையை இன்னும் மோசமாக்கும். எனவே அல்லாஹ்வுக்காக அவசரமாக களத்தில் இறங்குங்கள். முஸ்லிம்கள் ஒரு தலைமைத்துவ சபையின்கீழ் ஒன்றுமட்டுவிட்டார்கள்; என்ற செய்தி அரசுக்குச் சென்றாலே பாதிப்பிரச்சினையை அரசு தீர்த்துவிடும். அரசியல்வாதிகளும் இந்த தலைமைத்துவசபையின் சொற்படிதான் இனிமேல் நடப்பார்கள்; என்று அரசு உணர்ந்தால் அரசியல்வாதிகளையும் அரசு மதிக்கும். 

எனவே தயவுசெய்து களத்தில் இறங்குங்கள். இதைவிட சிறந்த திட்டம் உங்களிடம் இருந்தால் அதையாவது சொல்லுங்கள் அல்லது செய்யுங்கள். எதையாவது செய்து முஸ்லிம்களைப் பாதுகாக்க முன்வாருங்கள். மௌனமாக மாத்திரம் இருந்துவிடாதீர்கள். இலங்கையை இன்னுமொரு மியன்மாராக பார்க்க முடியாது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.