Header Ads



"ரோஹின்யா" எனும் பதத்தை ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ முடியாது - மியன்மார் இராணுவத் தளபதி அறிவிப்பு

மியான்மர் நாட்டின் மேற்குப் பகுதியில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்படுவதற்கான ஆதாரங்களாக, புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தப் படங்கள், அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் ரோஹிஞ்சா முஸ்லிம்களை மியான்மரை விட்டே துரத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கான ஆதாரம் என்று அம்னெஸ்டி கூறியுள்ளது.

கடந்த மாதம் தொடங்கிய வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு, இதுவரை சுமார் 3,89,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ரகைன் மாகாணத்தில் உள்ள சுமார் 30% ரோஹிஞ்சா கிராமங்கள் தற்போது காலியாக உள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

தனது ஆதாரங்கள் தீ எரியும் இடங்களைக் கண்டறிந்த தரவுகள், செயற்கைகோள் புகைப்படங்கள், பிற காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாக அம்னெஸ்டி கூறியுள்ளது.

சுமார் மூன்று வார காலமாக "திட்டமிட்டு அரங்கேற்றப்படும் தீவைப்புச் சம்பவங்களை," நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களுடன் அம்னெஸ்டி அறிக்கை இடம்பெற்றுள்ளது.

"இந்த ஆதாரங்கள் மறுக்க முடியாதவை. மியான்மர் பாதுகாப்பு படையினர் ரகைன் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் இருந்து ரோஹிஞ்சா மக்களை வெளியேற்றும் நோக்கத்துடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கின்றனர், " என்று அந்த அமைப்பின் நெருக்கடி கால நடவடிக்கைகளுக்கான இயக்குனர் திரானா ஹசன் கூறியுள்ளார்.

பாதுகாப்பு படையினர் கிராமங்களைச் சூழ்ந்துகொண்டு, தீ வைக்கப்பட்ட தங்கள் வீடுகளில் இருந்து தப்பிக்க முயலும் ரோஹிஞ்சா மக்களை சுட்டுக்கொல்லும் "மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களில்" ஈடுபடுவதாக அம்னெஸ்டி கூறியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இதைப்போன்ற நெருக்கடி நிலைகளில் இந்த அளவுக்கு நெருப்பினால் உண்டாகும் அழிவுகளைக் கண்டதில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் சா தே, ரகைன் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் ரோஹிஞ்சா மக்கள் தஞ்சமடையுமாறு கூறியிருந்தாலும், வங்கதேசம் சென்ற அனைவரையும் மீண்டும் தங்களால் மியான்மருக்குள் அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

அரசில் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவரான, மியான்மர் பாதுகாப்பு படைகளின் தலைவர் மின் ஆங் லாங் "உண்மையை மறைத்து 'ரோஹிஞ்சா' எனும் பதத்தை ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ முடியாது," என்று கூறியுள்ளார்.

அதாவது, அவர்களை வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்னும் அரசின் நிலையை மீண்டும் ஒரு முறை மறைமுகமாகக் கூறியுள்ளார்.

"ரகைன் இனத்தவர்கள் (புத்த மதத்தினர்) நம் முன்னோர்களின் காலம்தொட்டே இங்கு வாழ்ந்து வரும் பூர்வ குடிகள்," என்று அவர் புதன்கிழமையன்று கூறியுள்ளார்.

ரகைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமங்களில் 30% அதிகமான பங்கு வகிக்கும், 176 கிராமங்கள் தற்போது யாருமற்று காலியாக உள்ளதாக மியான்மர் அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

அம்னெஸ்டி அறிக்கை வெளிவருவதற்கு முன்பே, அங்கிருந்து தப்பி வந்தவர்களால், பாதுகாப்பு படையினர் ரோஹிஞ்சா கிராமங்கள் அழிக்கப்படுவதாக வாக்குமூலம் அளித்தனர்.

மிகவும் கட்டுப்பாடு நிறைந்த, அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்களுக்கான சுற்றுப் பயணத்தில் பங்கேற்ற பிபிசியின் ஜொனாதன் ஹெட் அங்கு ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகளுக்கு மியான்மர் காவல் துறையினர் தீ வைப்பதை நேரில் பார்த்துள்ளார்.

No comments

Powered by Blogger.