Header Ads



ஷிப்லி பாறூக், செய்த காரியம்

எதிர்வரும் சனிக்கிழமையுடன் (30) கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட கொடுப்பனவில் மீதமாகிய மற்றும் எஞ்சிய அலுவலக பொருட்கள் என்பனவற்றை கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும்  கையளித்துள்ளார்.
 
கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வுக்கு முந்திய அமர்வு நேற்று (25) திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி தலைமையில் நடைபெற்றது.
 
இதன்போது சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கிழக்கு மாகாண சபையினால் தனக்கு வழங்கப்பட்ட மாதாந்த சம்பளத்தில் மக்கள் பணிக்காக செலவு செய்த தொகை தவிர்ந்து மீதமான மாகாண சபையின் அமர்வுகளின் போது தனது உணவுகளுக்காக மாகாண சபையினால் செலவு செய்யப்பட்ட தொகை அடங்கலாக ரூபா 67,428.40 விற்கான காசோலையினை கையளித்தார்.
 
அத்துடன் தனது அலுவலக நடவடிக்கைகளுக்கென கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட காகிதாதிகள் உள்ளிட்ட எஞ்சிய அனைத்து அலுவலக பொருட்களையும் இதன்போது கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர் எம்.சீ.எம். செரீப் முன்னிலையில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தியிடம் இப்பொருட்களை கையளித்தார்.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாண சபை உறுப்பினராக பதவியேற்றது முதல் தனக்கென வழங்கி வைக்கப்பட்ட சம்பளத்தில் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒரு ரூபாவினைக்கூட செலவு செய்யாத நிலையில் அத்தொகையினை மக்களுக்காக வழங்கியதாக தெரிவித்த அவர், தனது தனிப்பட்ட நிதியிலிருந்தும் அதிகளவான தொகையினை மக்கள் பணிக்காகவும் செலவு செய்ததாக குறிப்பிட்டார்.
 

 

 
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

No comments

Powered by Blogger.