September 05, 2017

பங்களாதேஷ் சென்ற ரொஹிங்கியர்கள் 90,000 ஆக அதிகரிப்பு

வன்முறை நீடிக்கும் மியன்மாரில் இருந்து பங்களாதேஷில் தஞ்சமடைந்த ரொஹிங்கிய முஸ்லிம்களின் எண்ணிக்கை 90,000ஐ நெருங்கியுள்ளது. ஏற்கனவே பெரும் எண்ணிக்கையிலானோர் பங்களாதேஷுக்கு படையெடுத்திருக்கும் நிலையில் புதிய வருகைகளால் உதவி அமைப்புகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறும் ரொஹிங்கிய முஸ்லிம்களில் மேலும் 20,000 பேர் வரை பங்களாதேஷ் மற்றும் மியன்மார் மேற்கு மாநிலமாக ரகினுக்கு இடையிலான எல்லை பகுதியில் நிர்க்கதியான நிலையில் உள்ளனர். இவர்கள் பங்களாதேஷுக்குள் நுழைய காத்திருப்பதாக ஐ.நா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பத்து தினங்களுக்கு முன்னர் புதிய வன்முறைகள் வெடித்ததை அடுத்து பங்களாதேஷ் தனது நாட்டு எல்லை பகுதியில் ரோந்து நடவடிக்கையை பலப்படுத்தியது. எனினும் பங்களாதேஷ் எல்லை காவல் படையினர் அண்மைய தினங்களில் தப்பிவரும் அகதிகளை நாட்டுக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர்.

இதில் நாப் நதியை கடந்து பங்களாதேஷை அடைய முயன்ற பல ரொஹிங்கிய அகதிகளும் மூழ்கி பலியாகியுள்ளனர். இதில் அண்மைக் காலத்தில் வந்தடைந்த அகதிகள் எல்லைக்கு அருகில் இருக்கும் முகாம்களில் அதிக அளவில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு உள்ளுர் மக்கள் உதவிகளை வழங்கி வருவதாக ஐ.நா கூறியுள்ளது.

நான்கு தினங்களுக்கு முன் மியன்மாரில் இருந்து தப்பி வந்த 25 வயது முஹமது ஹுஸைன் குறிப்பிடும்போது, “நாம் இங்கு தங்குமிடங்களை அமைக்க தொடர்ந்து முயன்று வருகின்றபோதும் போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. எந்த அரச சார்பற்ற அமைப்பும் இங்கு வரவில்லை. எமக்கு உண்ண உணவு இல்லை. சில பெண்கள் வீதியோரத்தில் குழந்தை பிரசவிக்கின்றனர். சுகவீனமுற்றிருக்கும் சிறுவர்கள் எந்த மருத்துவ உதவியும் இன்றி உள்ளனர்” என்றார்.

ரொஹிங்கிய ஆண்கள் குழுவொன்று சுற்றிவளைக்கப்பட்டு மூங்கில் குடிசை ஒன்றுக்குள் சிறைப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டதாக அவர் போர்டிபை உரிமைக் குழு என்ற தன்னார்வ அமைப்பொன்றிடம் விபரித்துள்ளார்.

“தீமூட்டப்பட்ட அந்த குழுவில் இருந்த எனது சகோதரரும் கொல்லப்பட்டார். குடும்ப அங்கத்தவர்களின் சடலங்களை வயல் வெளி ஒன்றில் இருந்து கண்டுபித்தோம். அந்த சடலங்களில் வெட்டுக் காயங்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் இருந்தன. எனது உறவு சிறுவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. ஒருவர் ஒன்பது வயது என்பதோடு மற்றையவர் ஆறு வயது உடையவர். எனது மைத்துனி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருந்தார்” என்று அப்துல் ரஹ்மான் என்பவர் விபரித்துள்ளார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த 27 வயது சுல்தான் அஹமட் என்பவர் கூறும்போது, “சிலரது தலை துண்டிக்கப்பட்டதோடு சிலர் வெட்டப்பட்டுள்ளனர். (அண்டை கிராமத்தை சேர்ந்த ஆயுதமேந்தியோர் வந்து) தலைகளை துண்டித்து கொலையில் ஈடுபடும்போது நாம் வீட்டில் மறைந்திருந்தோம். அதனை கண்டபோது நாம் வீடுகளை விட்டு தப்பியோடினோம்” என்றார்.

ஏனைய கிராமங்களில் இருந்து தப்பி வந்த ரொஹிங்கியாக்களும் தலைகள் துண்டிக்கப்படுவது மற்றும் கழுத்து வெட்டப்படுவதை கண்டதாக விபரித்துள்ளனர்.

துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் எர்துவான் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இனப்படுகொலைக்கு நிகரானது என்று குறிப்பிட்டார். அடைக்கலம் பெறும் ரொஹிங்கியாக்களுக்கு உதவும்படி பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமித்திடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இந்தோனேஷிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுதி நேற்று மியன்மார் தேசிய தலைவர் ஆங் சான் சூக்கி மற்றும் அதிகாரிகளை சந்திக்கவிருந்தார். இதன்போது வன்முறைகளை நிறுத்த அவர் வலியுறுத்தவிருந்தார். கடந்த வார இறுதியில் ஜகர்தாவில் உள்ள மியன்மார் தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துரைகள்:

Post a Comment