Header Ads



வித்தியா கொலைக் குற்றவாளிகள் 7 பேரும் பல்லேகல - தும்பர சிறைச்சாலையில் அடைப்பு


புங்குடுதீவு மாணவி வித்தியாவைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்தமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 குற்றவாளிகளும் நேற்று (27) இரவு பல்லேகல தும்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

இந்த கொலை வழக்கில் 7 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான Trial at Bar தீர்ப்பாயத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கின் பிரதான எதிரியான சுவிஸ் குமார் மற்றும் 02, 03, 04, 05, 06, 08 ஆம் இலக்க எதிரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 7 குற்றவாளிகளுக்கும் தலா 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 02, 03, 05, 06, 08 ஆம் இலக்க குற்றவாளிகள் தலா 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலதிகமாக நான்கு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, 04, 09ஆம் இலக்க குற்றவாளிகள் 70,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், வித்தியாவின் குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

இதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி உத்தரவிடும் நாளில் அனைத்து குற்றவாளிகளும் உயிர் பிரியும் வரை தூக்கிலிடப்படுவர் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் இலக்க சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமை காரணமாக அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.