Header Ads



ஐ.நா. சபையின் 72 ஆவது, கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை

எனது நாட்டினுள் மீண்டுமொரு போர் ஏற்படாததை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து இனங்களிடையேயும் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு எனது அரசு முன்னெடுக்கும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையினதும் உலக நாடுகளினதும் ஒத்துழைப்புக்களை மிகவும் கௌரவமாக எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கில் அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணியளவில் பல நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். ஐக்கிய நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி  ஆற்றிய உரை வருமாறு,

அனைவருக்கும் மாலை வணக்கங்கள்,

இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் மூன்றாவது தடவையாகவும் இந்த சபையில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த 72 ஆவது மாநாட்டின் முக்கிய தலைப்பாக இருப்பது, பேண்தகு உலகில் அனைத்து மனிதர்களும் கௌரவமாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்காக எடுக்கும் முயற்சியாகும். இன்று உலகில் நிலவும் பல்வேறு நிலைமைகளை கருத்திலெடுக்கும்போது மிகவும் காலத்துக்குகந்த தலைப்பு இதுவெனக் கூறமுடியும். 2015 ஜனவரியில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருதேன்.

அவ்வாறு தெரிவு செய்யப்பட முன்னர் எனது அன்புக்குரிய நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தேன். அதில் நான் விசேடமாக குறிப்பிட்ட விடயம், உலகில் எந்தவொரு நாட்டுத் தலைவருக்கும் இல்லாத அதிகாரங்கள் இலங்கையின் அரச தலைவருக்கு இருப்பதனால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அதிகாரங்களை ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக்கி நாட்டின் பாராளுமன்றத்திற்கு ஒப்படைப்பதான வாக்குறுதியாகும்.

ஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன்.

ஜனநாயகத்தை பாதுகாத்து போசிக்கும் நாடுகளில் ஆட்சிக்குவரும் தலைவர்கள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் அதிகாரத்தை உரியவாறு பயன்படுத்துவதற்கும், நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தமது அதிகாரத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். ஆயினும் கடந்த பல தசாப்தங்களாக உலக வரலாற்றை நோக்கும் போது பல தலைவர்கள் அதிகாரத்திலிருந்து விலகிச்செல்ல விரும்பாமை காரணமாக அந்த நாட்டின் சமாதானம் சீர்குலைவதுடன் அது சர்வதேச ரீதியிலான பல்வேறு விதமான பிரிவுகளுக்கும் கரணமாக இருப்பதனைக் காணமுடிகின்றது. அவ்வாறான வரலாற்றுத்தகவல்கள் பற்றிய, உள்நாட்டு வெளிநாட்டு ஏராளமான அனுபவங்கள் எமக்கு இருக்கின்றன.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நிலவிய உள்நாட்டுப் போர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நாட்டைப் பிரிப்பதற்கு போராடிய பயங்கரவாதிகளைத் தோற்கடித்து சுதந்திரமான ஜனநாயக நாடாக இயங்க எம்மால் முடிந்துள்ளது. பொருளாதார பின்னடைவுகளுடன் நாட்டில் ஏற்பட்ட பின்னடைவுகளில் கற்றுக்கொண்ட பாடங்களுடன் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை நோக்கி பயணித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக தேசிய பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில் மயமாக்கலில் நாம் புதிய அத்தியாயத்தை திறந்துள்ளோம். இந்த அபிவிருத்தி செயற்பாடுகளின் போது சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குவது எனது அரசின் முக்கியமான குறிக்கோளாக இருக்கின்றது.

சில கடும்போக்காளர் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். சில கடும்போக்காளர் விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள் ஆயினும் 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நட்டினுள் இன ஒற்றுமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்பி எனது அன்புக்குரிய நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

ஆகையினாலே நிதானமாகச் செல்லும் காத்திரமான பயணத்திற்காக உங்கள் அனைவரினதும்  ஒத்துழைப்பை நல்க வேண்டுமென இங்கே மிகத்தெளிவாக குறிப்பிடுகிறேன்.

துரிதமான பயணம் ஆபத்துமிக்கதாகும் என்பதை நாம் அறிவோம். ஆகையால் சில கடும்போக்காளர் எதிர்பார்க்கும் துரிதமான உடனடித் தீர்வுகளை வழங்குவதிலுள்ள சிரமங்களை, எமது ஒட்டுமொத்த சமூகத்திலுமுள்ள சிக்கலான தன்மையின் அடிப்படையில் நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்களென நான் நம்புகிறேன். ஆகையால் எனது நாட்டினுள் மீண்டுமொரு போர் ஏற்படாததை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து இனங்களிடையேயும் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு எனது அரசு முன்னெடுக்கும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையினதும் உலக நாடுகளினதும் ஒத்துழைப்புக்களை மிகவும் கௌரவமாக எதிர்பார்க்கிறேன்.

பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பண்பான சமூகத்தைக் கட்டியெழுப்பி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்படாத வண்ணம் செயற்பட்டு உலகில் சுபீட்சம் மிக்க பொருளாதாரத்துடன் கூடிய முன்மாதிரியான ஒரு நாட்டை உருவாக்க உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதுடன் கௌரவ தலைவர் அவர்களுக்கும் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துககளை கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

No comments

Powered by Blogger.