Header Ads



பிறக்கும் போதே 7 பற்களுடன் பிறந்த குழந்தை

பிறக்கும்போதே ஏழு பற்களுடன் பிறந்த ஓர் ஆண் குழந்தையின் பற்களை குஜராத்தில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

தற்போது அந்தக் குழந்தை நலமுடன் இருப்பதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் மீத் ராமாத்ரி பிபிசியிடம் கூறியுள்ளார்.

அந்தப் பற்கள் உறுதியாக இல்லாதது மட்டுமன்றி, அவற்றில் ஒன்று உடைந்த நிலையிலும் இருந்தது. ஒருவேளை, அந்தப் பல் உடைந்து, குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிக்கொண்டால், அது அவனுக்கு உயிராபத்தை விளைவிக்கும் என்பதால் அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சைக்கு முன்னரே, உடைந்த நிலையில் இருந்த பல் விழுந்துவிடக்கூடாது என்று தான் வேண்டிக்கொண்டதாக பிபிசி செய்தியாளர் சுசிலா சிங்கிடம் பேசிய ராமாத்ரி தெரிவித்தார்.
இரண்டு கட்டமாக நடைபெற்ற அறுவை சிகிச்சையில் முதலில் நான்கு பற்களும் பின்னர் மூன்று பற்களும் அகற்றப்பட்டன.

அந்தக் குழந்தை பிறந்த சில நாட்களில், அவனுக்குப் பாலூட்டுவதில் சிரமம் இருப்பதாக அவன் பெற்றோர் மருத்துவரிடம் கொண்டு சென்றபோது, அவனது வாயில் வெள்ளை நிறத் திசுக்கள் இருப்பதை மருத்துவர் கண்டறிந்தார்.


அதன்பின் அந்தக் குழந்தையைப் பரிசோதித்த ராமாத்ரி, அந்தத் திசுக்கள் பற்களே என்பதை உறுதி செய்தார்.

"சில நேரங்களில் பற்களின் முனைகள் மட்டும் வெளியில் தெரியும். ஆனால், இந்தக் குழந்தைக்கு அந்தப் பற்கள் அனைத்தும் முழுமையாக முளைத்தேவிட்டன. இது வழக்கத்தைவிடவும் சற்று முன்னரே நடந்துவிட்ட சாதாரண உயிரியல் நிகழ்வுதான்," என்று அவர் கூறினார்.

தற்போது அக்குழந்தைக்கு நன்றாகப் பாலூட்ட முடிந்ததாலும், பிற்காலத்தில் அவனுக்கு அந்த இடங்களில் பற்கள் முளைப்பதில் இந்த அறுவை சிகிச்சையால் ஏதேனும் பாதிப்பு வருமா என்பதைக் கூறுவது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.