Header Ads



600 மில்லியன் மோசடி செய்த குற்றவாளிகளை, அப்பாவி என்கிறார் மகிந்த ராஜபக்ச

தமது முன்னாள் செயலராகப் பணியாற்றிய லலித் வீரதுங்க எந்த தவறையும் செய்யவில்லை என்றும், நாட்டின் பௌத்தர்களுக்கு அவர் ஆற்றிய பணிக்காகவே இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும், மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசுக்குச் சொந்தமான 600 மில்லியன் ரூபா நிதியை தவறான முறையில், தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மகிந்த ராஜபக்சவின் முன்னாள் செயலரான லலித் வீரதுங்கவுக்கும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்டவுக்கும், தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, லலித் வீரதுங்க எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் அப்பாவிகள் என்றும், இந்த தீர்ப்புக்கு எதிராக கூட்டு எதிரணி மேல்முறையீடு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணம் மற்றும் இழப்பீட்டைச் செலுத்துவதற்கு கூட்டு எதிரணியுடன் இணைந்துள்ள பௌத்த பிக்குகள் முன்வந்துள்ளனர் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இருவரும் தலா 20 இலட்சம் ரூபா தண்டப்பணத்தையும், தலா 50 இலட்சம் ரூபா இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.