Header Ads



லொத்தர் சீட்டிழுப்பில் 5 கோடி ரூபாய் பரிசு, பெற்றவரின் பரிதாபம்

இலங்கையில் லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் ஐந்து கோடி ரூபா வெற்றி பெற்ற நபருக்கு ஓராண்டு புனர்வாழ்வு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானமை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு புனர்வாழ்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுராதபுரம் கல்கடவல பிரதேசத்தை சேர்ந்த ஹேரத் ஹாமிகே ரசிக பண்டார சுகததாஸ என்ற 2 பிள்ளைகளின் தந்தையே போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்.

பூ விற்பனை செய்யும் வர்த்தகரான ஹேரத் ஹாமிகே, கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் சீட்டிழுப்பின் மூலம் ஐந்து கோடி ரூபாய் பரிசு பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்.

ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியமை தொடர்பிலும், இதற்கு முன்னர் மேற்கொண்ட 6 குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த நபரை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்புமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹெரோயின் பயன்பாட்டினால் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளமையினால் மனைவி இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய வெலிகந்தையில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் அவர் புனர்வாழ்வு பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் போது நீதிமன்ற வளாகத்திற்கு வருகைத்தந்த சந்தேக நபரின் தாயார், தனது மகன் போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவர் அல்ல எனவும் மருமகளின் கோரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் எனவும், பொலிஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் மனைவியின் கோரிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். இதனால் கோபமடைந்தவர் மருமகளை கடுமையாக தாக்கியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

1 comment:

Powered by Blogger.