Header Ads



அபராதம் செலுத்தாவிடின் லலித் வீரதுங்க மேலும் 3 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்...

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளதாக இவர்களின் சார்பில் வாதிட்ட சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா நிதியை, முறைகேடான முறையில், சில் துணிகளை வழங்குவதற்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு தலா 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வழங்கியது.

இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதும், லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோர் சார்பாக முன்னிலையாகி வாதிட்ட சட்டவாளர் காலிங்க இந்திரதிஸ்ஸ, இந்த தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, இவர்கள் இருவருக்கும், தலா 50 இலட்சம் ரூபா இழப்பீடாக செலுத்துமாறும், 20 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த இழப்பீடு மற்றும் அபராதத்தை வரும் 20 ஆம் நாளுக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால், இழப்பீட்டுக்குப் பதிலாக 2 ஆண்டுகளும், அபராதத்துக்காக 1 ஆண்டும் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.