Header Ads



ஒரு கல்லில் 2 குருவிகளை கொல்ல ரணில் தயாராகிறார் - முஸ்ஸமில்

காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தை இலங்கைக்குள் அமுல்படுத்தும் சட்டமூலத்தை எப்படியாவது நிறைவேற்றி, ஒரு கல்லில் இரண்டு குருவிகளை கொல்ல பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு விட்டால், படையினர் எவருக்கும் தண்டனை பெற்றுக்கொடுக்க இடமளிக்க போவதில்லை என்று ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி பிரயோசனமற்று போய்விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புறக்கோட்டையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து ஒருவரை பாதுகாக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டமூல வரைவு எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிக்க அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட படையினரை கொல் களத்திற்கு இட்டுச் செல்லும் இந்த சர்வதேச இணக்கப்பாட்டு சட்டமூலத்திற்கு நான்கு புறமும் இருந்து எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கையில்லாத கருத்துக்களை வெளியிட்டு, சட்டமூலம் கடந்த காலத்திற்கு ஏதுவானதாக இருக்காது எனக் கூறியுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், சபாநாயகர் அதில் கையெழுத்திட்ட நாளில் இருந்தே சட்டமூலம் அமுலுக்கு வரும் என பிரதமர் கூறுகிறார்.

இது முற்றிலும் நாட்டையும் நாட்டு மக்களையும் குறிப்பாக நாட்டிற்கு அமைதியை வென்றுக்கொடுத்த ஓய்வுபெற்ற படையினர் உட்பட முழு படையினரையும் ஏமாற்ற புனையப்பட்ட கதை.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது பந்திக்கு அமைய எதிர்காலத்தில் அமுலாகும் வகையில் குற்றவியல் சட்டங்களை இயற்ற முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க இதனை அறிந்து கொண்டே இப்படியான கருத்தை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்புச்சட்டத்தின் 13வது பந்தியில் 13(6) என்ற உப பந்தியில் கடந்த காலத்திற்கு அமுலாகும் வகையில் குற்றவியல் சட்டங்களை எப்படி கொண்டு வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒரு சர்வதேச இணக்கப்பாடு அல்லது சட்டத்தை இலங்கைக்குள் அமுல்படுத்த வேண்டுமாயின் கொண்டு வரப்படும் சட்டம் கொண்டு வரப்பட்ட நாளில் இருந்தே அமுலாகும்.

உதாரணமாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து ஒருவரை பாதுகாக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் கடந்த 1992ஆம் ஆண்டு சர்வதேச சட்டத்தில் இணைக்கப்பட்ட சட்டம்.

இதனால், எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அதன் மூலம் தற்போதைய காலத்தில் இருந்து கடந்த 1992ஆம் ஆண்டு வரை நடந்த சம்பவங்கள் தொடர்பிலும் தண்டனை வழங்க முடியும்.

இதற்கு அமைய கடந்த 1992ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களின் கீழ் புதிய சட்டத்தின்படி இலங்கையில் ஏற்படுத்தப்படும் விசேட மேல் நீதிமன்றம் மற்றும் வெளிநாட்டு நீதிமன்றங்களில் படையினருக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்.

80ஆம் ஆண்டுகளின் இறுதியில் ஏற்பட்ட வன்செயல்களின் போது காணாமல் போன தமது உறுப்பினர்களுக்கு நியாயம் கிடைக்குமாயின் சட்டமூலத்தை ஆதரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கூறுவது பொய்.

சட்டம் கடந்த 1992ஆம் ஆண்டு பின்னர் நடந்த சம்பவங்களுக்கே செல்லுப்படியாகும். ரணில் விக்ரமசிங்கவும் தப்பித்துள்ளார். பட்டலந்த சித்திரவதை முகாமில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்தும் இந்த சட்டத்தினால் விசாரிக்க முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் அமுலுக்கு வந்ததும் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் படையினருக்கும் தண்டனை கிடைக்கும் என்பது தெளிவாகியுள்ளது என மொஹமட் முஸ்ஸமில் குறிபிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.