September 15, 2017

லண்டன் சுரங்க ரயிலில், தீவிரவாதத் தாக்குதல் - 22 பேர் காயம்

லண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள புல்ஹாமில் சுரங்க ரயிலில் வெடிச்சம்பவம் நடைபெற்றதாகவும், அதை தீவிரவாத நடவடிக்கையாகக் கருதுவதாகவும் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், தீக்காயங்களுடன் சுமார் 22 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சுரங்க ரயில் சேவை தொடரமைப்பில் திறந்தவெளிப் பகுதியில் உள்ள பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையத்தில், உள்ளூர் நேரப்படி காலை 8.20 மணிக்கு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ரயிலின் முன்புற பெட்டிகளில் ஒன்றில் வெடிப்பு சப்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து தீப்பிழம்பு தோன்றியதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.

பீதியடைந்த பயணிகள் ரயிலின் கதவுகள் திறந்ததும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு தரைத்தளத்திற்கு ஓடமுயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் காயமடைந்தனர்.

முகத்திலும், கால்களிலும் தீக்காயம் ஏற்பட்ட பெண், சுயநினைவுள்ள நிலையில் ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டதை கண்டதாக சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
சூப்பர் மார்க்கெட் பெயர் பொறித்த பை ஒன்றில் பெயிண்ட் டப்பாவில் வைக்கப்பட்டிருக்கும் வயர்களை போல் தோன்றும் பொருட்கள், எரிவதாக காட்டும் புகைப்படம் ஒன்று டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை பக்கெட் போன்ற பாத்திரத்தில் இருந்து ஒயர்கள் நீண்டு வெளியில் காணப்படுவதை பயணி ஒருவர் படம் பிடித்திருக்கிறார்.

பிரிட்டனின் எம்.ஐ. 5 நிறுவனத்துடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான உளவுத்துறை நிபுணர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக உதவி ஆணையர் மார்க் ரெளலி தெரிவித்தார்.

பார்சன்ஸ் கிரீன் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு அனுதாபப்படுவதாகவும், இந்தத் தீவிரவாத நடவடிக்கையை அடுத்து அவசரகால சேவை அமைப்புக்கள் மிகத் துரிதமாகவும் தைரியமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என பிரதமர் தெரீசா மே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லண்டனில் உள்ள பொதுப் போக்குவரத்து அனைத்திலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என கூடுதல் ஆணையர் ரெளலி தெரிவித்துள்ளார்.மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில், அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வெடிச் சம்பவம் நடந்தபோது அந்த ரயிலில் இருந்ததாகக் கூறும் எம்மா ஸ்டீவி என்ற 27 வயதுப் பெண், மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியேறிய போது, ரயில் நிலைய படிக்கட்டுக்களில் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவித்தா்.

கூட்ட நெரிசலில் தனது காலுக்கடியில் கர்ப்பிணி ஒருவர் சிக்கிக் கொண்டிருந்ததாகவும் அவரை மிதிக்காமல் இருக்க தான் பெரிதும் கஷ்டப்பட்டதாகவும் கூறினார். மேலும், தலையில் காயத்துடன் சிறுவன் ஒருவன் இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள்தான் அதிகமாக இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, லண்டனில் ஐந்தாவது தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக பிசிசி உள்நாட்டு விவகாரங்களுக்கான செய்தியாளர் டொமினிக் கேஸியானி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு நடைபெற்ற நான்கு சம்பவங்களில் 36 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவத்தில்தான் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 6 முக்கிய தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்துவிட்டதாகவும், அவற்றின் விவரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 1970களில் ஐஆர்ஏ குண்டுவெடிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் தொடர்ச்சியாக தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவது இப்போதுதான்.

இதை செய்வது யார், மேலும் ஏதாவது வெடிபொருள்கள் உள்ளனவா, யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்ற கேள்விகளுக்கு போலீசார் உடனடியாக விடை கண்டுபிடித்தாக வேண்டும்.

4 கருத்துரைகள்:

ISIS again?
When will you stop all these?

It's conspiracy of Western Extremist

The groups who are operating ISIS should decide it.
Nothing to do with Muslims.

Highly UN Islamic. Islam has taught us not to harm public who did not fight with you. ISIS is not to be from true Muslims, bacause they do not follow the teachings of Islam in war. They creating problem to Muslim countries and Muslims Around the world due to their ignorance or guiding of West.

Post a Comment