Header Ads



214 முஸ்லிம் கிராமங்கள் அழிப்பு, புதிய செய்மதி படங்கள் வெளியாகியது

மியன்மாரின் ரகைன் மாநிலத்தில் உள்ள ரொஹிங்கிய கிராமங்களில் கவலைக்கிடமான நிலையில் அழிவுகள் இடம்பெற்றிருப்பதை புதிய செய்மதி படங்கள் காட்டுவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர

90 வீதத்துக்கும் அதிகமான கட்டுமானங்கள் சேதமாகி இருக்கும் நிலையில் மொத்தமாக 214 கிராமங்கள் முற்றாக அழிவடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்புக் குழுவின் ஆசிய பிரிவுக்கான துணை இயக்குனர் பில் ரொபட்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றி கூறியதாவது, “ரொஹிங்கியாக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதை தடுக்கும் வகையில் பாரிய அளவில் அழிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான அதிர்ச்சிதரும் ஆதாரங்களாக இந்த படங்கள் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் தொலைநோக்கி நிறுவனம் ஒன்றின் ஊடாக மனித உரிமை கண்காணிப்புக் குழு கடந்த சனிக்கிழமை இந்த படங்களை பெற்றுள்ளது.

பருவப்பெயர்ச்சி காரணமாக முன்னதாக பெறப்பட்ட செய்மதிப் படங்களில் ஏற்பட்டிருக்கு அழிவுகள் குறித்து அளவிட முடியாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தப்பியோடிய மக்கள் மீண்டும் திரும்புவதை தவிர்க்க மியன்மார் பாதுகாப்பு படையினால் இவ்வாறு கிராமங்களுக்கு தீ வைக்கப்படுவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவின் சட்ட ஆலோசகர் லின்டா லக்திர் குறிப்பிட்டார்.

தப்பி வந்தவர்கள் மனித உரிமை கண்காணிப்பு குழுவிடம் அளித்த தகவலின்படி, “இராணுவம் கிராமங்களுக்கு வந்து அங்குள்ள மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் கொள்ளை மற்றும் தீவைப்புகள் இடம்பெறுவதாகவும்” கூறப்பட்டுள்ளது. இம்மாத ஆரம்பத்தில் இந்த பகுதியை பார்வையிடச் சென்ற ஊடகவியலாளர் குழுவொன்று இது போன்ற அவலநிலையை விபரித்திருந்தனர்.

“கிராமத்தில் கட்டடங்கள் விரைவாக தீப்பற்றி எரிவதை எம்மால் காண முடிந்தது. இந்த கிராமத்தின் வீடுகள் 20, 30 நிமிடங்களில் எரிந்து சாம்பலாவதை பார்க்க முடிகிறது” என்று நிலைமையை நேரில் பார்த்த பி.பி.சி தொலைக்காட்சி செய்தியாளர் விபரித்திருந்தார்.

ரொஹிங்கிய மக்கள் பல தசாப்தங்களாக பாகுபாட்டுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் ஓகஸ்ட் மாதம் பொலிஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே தற்போதைய வன்முறைகள் வெடித்தன. அது தொடக்கம் ரொஹிங்கிய அகதிகளுக்கு எதிரான வன்முறைகளால் 400,000க்கும் அதிகமானோர் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த ரொஹிங்கிய மக்கள் தொகையில் பாதி அளவானோர் கடந்த மூன்று வாரத்திற்குள் பங்களாதேஷுக்கு தப்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.