Header Ads



விட்டுக் கொடுத்தால், இன்னும் 20 வருடங்களில் வடக்கு சிங்கள மயமாகி விடும் - விக்கினேஸ்வரன்

மற்றவர்கள் முகத்தைச் சுழிப்பார்கள் என்பதற்காக நாம் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுத்தால் இன்னும் இருபது வருடங்களில் வடக்கில் எல்லாவிடங்களும் சிங்கள மயமாகி விடும். இன்று ஒரு சிங்களப் பெயர் சூட்டினால் குடியா மூழ்கிப் போய் விடும்? எனக் கேட்பவர்கள் எம்மத்தியிலிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எங்கள் தமிழ் பேசும் குடியே மூழ்கிப் போய் விடும் என்பதே எனது பதிலாகவுள்ளது என வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவருமான சீ. வி. விக்கினேஸ்வரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் இன்று முற்பகல்-09 மணி முதல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு விடயத்தில் பெரும்பான்மையினர் முகத்தைச் சுழிப்பார்கள் என்பதற்காக எமது தேவைகளையும், உரிமைகளையும், அபிலாசைகளையும், விருப்புக்களையும் மூட்டை கட்டி வைக்க வேண்டுமா?

அண்மையில் ஒரு மத்திய அமைச்சர் வடமாகாணத் திணைக்களமொன்றுக்குச் சில நிதி உதவிகள் செய்து அதன் மூலம் கட்டிடமொன்று கட்டப்பட்டது. அந்தக் கட்டடத்தைத் திறக்கவிருந்த போது அந்தக் கட்டிடத்துக்கு ஒரு சிங்களப் பெயர் வைக்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.

எமது அலுவலர்கள் அதற்கு என்ன? என்று கூறி அந்தக் கட்டிடத்தைத் திறப்பதற்கான நாளும் குறிக்கப்பட்டு விட்டது. அந்தச் சமயத்தில் குறித்த விடயம் எனக்குத் தெரியவரவே ஏன் சிங்களப் பெயரை எமது மாகாணத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு வைக்கச் சம்மதித்தீர்கள்? எனக் கேட்டேன்.

அவர்கள் பணம் தானே என்று எனக்குப் பதில் வழங்கப்பட்டது. இந்தக் கட்டிடத்துக்குச் சிங்களப் பெயர் வைக்க வேண்டுமென்பதற்காகப் பணம் தர முடியாது எனக் கூறினார்களா? எனக் கேட்டேன். அதற்கு இல்லை என்று கூறினார்கள்.

அப்படியானால் அவர்கள் பணம் தந்தார்கள் என்பதற்காக அவர்கள் கூறும் பெயரை வைக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? எனக் கேட்டேன்.

முன்னரே சிங்களப் பெயர்கள் வடக்கில் வைக்கப்பட்டுள்ளன தானே என்று கூறினார்கள். அப்போது எமது மக்கள் பிரதிநிதிகளிருக்கவில்லை. உங்களைப் போன்ற அலுவலகர்கள் தானிருந்திருப்பார்கள்.

நீங்கள் இப்போது சிந்திப்பது போன்று தான் முன்னரிருந்த அலுவலகர்களும் சிந்தித்திருப்பார்கள். எனவே எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிருக்கும் போது அவ்வாறான விடயத்துக்குச் சம்மதம் தெரிவிப்பது தவறான விடயமல்லவா எனக் கூறினேன்.

அதற்குப் பதிலில்லை. அடுத்த நாள் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் என்னோடு பேசினார். நாங்கள் நாடளாவிய ரீதியில் ஒரே பெயரையே குறித்த கட்டிடங்களுக்கு வைக்கிறோம்.

நீங்களும் அதற்கு உடன்பட வேண்டும் எனக் கூறினார். ஏன் அதற்கு உடன்பட வேண்டும்? எனக் கேட்டேன். ஒரே நாடு என்பதால் பெயர்களில் ஒற்றுமையிருக்க வேண்டுமென்றார். அதற்கு நான் சிரித்து விட்டு நாடு ஒன்று தான்.

ஆனால், நாங்கள் வேறு...நீங்கள் வேறு....உங்கள் மொழி வேறு...எங்கள் மொழி வேறு...உங்கள் மதம் வேறு...எங்கள் மதம் வேறு...உங்கள் வாழ்க்கை முறை வேறு.. எங்கள் வாழ்க்கை முறை வேறு...இதற்காகத் தானே நாங்கள் ஒரு சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்காகப் போராடி வருகின்றோம்.

எனவே, எங்கள் தனித்துவத்தை நீங்கள் மதிக்க வேண்டும் எனக் கூறினேன். இதன் பின்னர் குறித்த கட்டிடத்தைத் திறக்க சம்பந்தப்பட்ட அமைச்சர் வரவேயில்லை.

இதன் காரணமாக அந்தக் கட்டிடம் இன்னமும் உத்தியோக பூர்வமாகத் திறக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

No comments

Powered by Blogger.