Header Ads



15 சதவீதமாக இருந்த, முஸ்லிம்களின் வாக்குகள் 2 சதவீதமாக குறைவடைந்தது

பிரதமர் வேட்பாளராக சமல் ராஜபக்ஷவை கடந்த பொது தேர்தலில் நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சி வேட்பாளர்களும் இணங்கியிருந்தால் சுதந்திரக் கட்சி 120 ஆசனங்களுடன் அமோக வெற்றியீட்டியிருக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியதாக அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க நேற்று தெரிவித்தார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக்கட்சி அலுவலகத்தில்  நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பொதுத் தேர்தல் நெருங்கிய சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வி கண்டிருந்தபோதும் அவரது குடும்பத்திலுள்ள எவ்வித ஊழல்களுடனும் தொடர்புபடாத சமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் தெரிவித்தார்.

மஹிந்தராஜபக்ஷ முதலில் அதற்கு விருப்பம் தெரிவித்தபோதும் பின்னர் அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட தோல்வியை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அனைத்தையும் அவருக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட சதியாகவே அவர் கருதினார் என்றும் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்தார்.

15 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் வாக்குகள் 02 சதவீதமாகவும் 45 சதவீதமாகவிருந்த கிறிஸ்தவர்களின் வாக்குகள் 25 சதவீதமாகவும் 30 சதவீதமாகவிருந்த தமிழர்களின் வாக்குகள் 15 சதவீதமாகவும் குறைவடைந்தன. இளைஞர்கள் அன்னப்பறவைக்கே வாக்களித்தனர். அத்துடன் சுதந்திரக் கட்சியின் நிரந்தர உறுப்பினர்களும் அன்னத்துக்கு வாக்களித்ததை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களென்ற வகையில் நாம் கண்டறிந்தோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை நாம் தோற்கடிக்க முயற்சித்தபோதும் அவர் சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க தம்மால் இயன்ற ஆகக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்து வருவதனை நாம் இப்போது காண்கிறோம் என்றும் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க கூறினார். 

No comments

Powered by Blogger.