Header Ads



ஒக்டோபர் 1 முதல், 45 இலட்சம் மாணவர்களுக்கு 'சுரக்‌ஷா காப்புறுதி - ஒப்பந்தமும் கைச்சாத்து

இலங்கையிலுள்ள 45 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்குமான 'சுரக்‌ஷா' காப்புறுதி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.

கல்வி அமைச்சு, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் நேற்று ஒப்பந்தம் கைச்சாத்திட்டது. ஒப்பந்தத்தில் கல்வி அமைச்சு சார்பாக அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சியும் இலங்கைக் காப்புறுதி கூட்டுதாபனத்தின் சார்பில்அதன் தலைவர் ஹேமக்க அமரசூரியவும் கைச்சாத்திட்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடை,காலையுணவு என்பன வழங்கப்படும் அதேநேரம் அனைத்து மாணவர்களுக்கும் காப்புறுதி வழங்கும் அரசின் திட்டம் தற்போது நடைமுறை சாத்தியமாகியுள்ளது.

'சுரக்‌ஷா' காப்புறுதி திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 4.5 மில்லியன் மாணவர்களும் உள்வாங்கப்படுகின்றனர். இதற்கமைய அனைத்து அரசாங்க பாடசாலைகள், கல்வி அமைச்சிடமிருந்து உதவி கிடைக்கும் அல்லது கிடைக்காத தனியார் பாடசாலைகள், அரச சார்பான பாடசாலைகள், பிரிவெனாக்கள், சர்வதேச பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து பாடசாலைகளையும் சேர்ந்த தரம் ஒன்று முதல் தரம் 13 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அமுலாகும் வகையில் இக்காப்புறுதி நடைமுறைக்கு வரும்.

இக்காப்புறுதி திட்டத்தின்படி 05 வயது முதல் 19 வயது வரையான பாடசாலை மாணவர்கள் பயன் பெறுவர். இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் சர்வ​தேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 24 மணித்தியாலங்களும் நடைமுறைக்கு வரும் வகையில் இக்காப்புறுதியை அமுல்படுத்தவுள்ளது.

இக்காப்புறுதி சுகாதாரம், விபத்து மற்றும் விசேட கொடுப்பனவுகள் எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.சுகாதார காப்புறுதியின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுமிடத்து 02 இலட்சம் ரூபாவும் மருத்துவ சிகிச்சை,பரிசோதனை மற்றும் மருந்துகளுக்காக 10 ஆயிரம் ரூபாவும் வருடாந்தம் வழங்கப்படும்.

விபத்துக் காப்புறுதி திட்டத்தின் கீழ் மாணவர் ஒருவர் உயிரிழந்தால் மரணச்சடங்குகளை முன்னெடுப்பதற்காக பெற்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதேநேரம் விபத்து காரணமாக மாணவரின் தாய் அல்லது தந்தை உயிரிழக்க நேரிட்டால் மாணவருக்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதுடன் சிறுவர்களுக்கு அங்கவீனம் ஏற்படும் பட்சத்தில் ஒரு இலட்சம் ரூபா வரை காப்புறுதி வழங்கவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

விசேட கொடுப்பனவு திட்டத்தின் கீழ் தனியார் வைத்தியசாலைக் கட்டணம் மற்றும் விசேடவைத்திய நிபுணர்களின் கட்டணங்களில் 20 சதவீத கழிவு வழங்கப்படும்.

No comments

Powered by Blogger.