Header Ads



TEA சாப்பிடலாமா..?

தீவிர ஆலோசனை, குழப்பமான வேலை, பரபரப்பான நேரங்களில் ‘ஒரு டீ சாப்பிடலாமா?’ என்று மனதுக்குள் தோன்றுவதை உணர்ந்திருப்போம். நண்பர்களும் டென்ஷனான சூழ்நிலையில் டீ சாப்பிட அழைப்பதையும் பார்க்கிறோம். உண்மையிலேயே நம் மனநிலையை  மாற்றும் சக்தி தேநீருக்கு இருக்கிறதா?

‘அது உண்மைதான். தேநீர் அருந்துவதால் நம் மனம் அமைதியடைகிறது. காரணம், அது நீங்களே விரும்பிச் செய்யும் ஒரு செயல். நம்பிக்கையுடன் செய்யும் ஒரு செயல். ஒருவகையில் அது தியானம்தான்’ என்று விளக்கமளிக்கிறது உளவியல்.

ஆம்... தைவான், திபெத் நாடுகளின் ஜென் குருமார்கள் தேநீர் அருந்துவதை ஒரு தியானமாகவே செய்கின்றனர். அதற்குப் பெயரே தேநீர் தியானம்தான். தேநீர் அருந்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஜப்பானியர்கள் ‘Tea Ceremony’ என்ற பெயரில் தேநீர் பருகுவதற்கு ஒரு விழாவே எடுக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தத்தைக் குறைத்து, அமைதி மற்றும் தெளிவைக் கொடுக்கும் இந்த தேநீர் தியானத்தை எப்படி செய்வது?

தியானம் என்றவுடன் கால்களை மடக்கி, கண்களை மூடிக்கொண்டு, மூச்சை இழுத்துவிடுவது என்று நினைக்காதீர்கள். தேநீர் தயாரிப்பது, அதை ஆற அமர அருந்துவது, குடித்து முடித்ததும் அதை சுத்தம் செய்வது என ஒவ்வொரு நிலையையும் ஆழ்ந்து அனுபவித்து செய்வதே தேநீர் தியானம். இதை படிப்படியாக செய்ய வேண்டும்.

தேநீர் கொதிக்கும்போது வரும் நறுமணத்தை நுகர்ந்து, தயாரிக்கும் அந்த நேரத்தை ஈடுபாட்டுடன் அனுபவிக்க வேண்டும். தயாரித்து முடித்தவுடன்
 தேநீரைப் பருகுவதற்கென அமைதியான, காற்றோட்டமான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மெலிதான வெளிச்சத்துடன் காற்றில் மந்திரமோ இசையோ மிதக்கும் வகையிலும் அந்த இடமாக இருப்பது சிறப்பு.

தேநீரை அருந்துவதற்குமுன் உங்கள் முன்னால் கோப்பையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த தேநீருக்கு ஒரு நன்றி கூறுங்கள். உலகில் சுத்தமான தண்ணீர்கூட கிடைக்காமல் கஷ்டப்படும் மக்களின் நிலையை சிந்தித்துப்பார்த்து, நமக்கு நல்ல தேநீர் கிடைத்ததற்காகவே அந்த நன்றி. வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக 2 நிமிடம் அமர்ந்து தேநீரின் நறுமணத்தை நுகர்வதில் மட்டுமே உங்கள் கவனம் இருக்கட்டும்.துளித்துளியாக, முழு கவனத்தோடு உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

இதன்பின்னர் இதுபோன்ற தேநீரோ, நேரமோ எனக்கு கிடைக்காது என எண்ணிக்கொண்டு, கவனம் சிதறாமல் ஒவ்வொரு துளியையும் ரசித்து விழுங்க வேண்டும். 10 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரையிலும், உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.பருகி முடித்த பின்னர் மீண்டும் அந்த தேநீருக்கு இன்னொரு நன்றி சொல்லுங்கள். இப்போது தேநீர் தியானம் முழுமை அடைந்துவிடும்.

இந்த தேநீர் தியானம் மூலம் நன்றியுணர்வு வளர்வதோடு, வாழ்க்கையின் ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயத்தையும் கொண்டாடும் மனப்பக்குவமும் கிடைக்கும். அருமையான ஒரு நாளைத் தொடங்குவதற்கான சடங்காகவும் ஆகிறது.

கவனம் சிதறாமல் ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கேற்ற ஒத்திகையாகவும், உறவுகளை ஒருங்கிணைத்து வளர்க்கவும் தேநீர் தியானம் உதவுகிறது. மன அழுத்தம், பரபரப்பு, டென்ஷன் என்ற சூழலில் தேநீர் அருந்தக் கிளம்பும்போது அதை தியானமாக செய்துபாருங்கள். ரிலாக்ஸாகிவிடுவீர்கள்!

 - என்.ஹரிஹரன்

1 comment:

Powered by Blogger.