Header Ads



அவன் முஸ்லிமாக இருப்பினும், எங்களுடைய ஒருவன் என்ற உணர்வு சிங்களவனிடம் இருக்கவேண்டும் - மைத்ரி குணரத்ன

-நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி + மீள்பார்வை-

‘ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவர் பிரதமராக இருப்பது இந்நாட்டின் துரதிஷ்டம். அவர் இருக்கும் வரையில் ஐதேகாவுக்கு தலை தூக்க முடியாது. இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் ஐதேவுக்கு வேட்பாளர்களை களமிறக்க முடியாமல் போனது. 2009ல் சரத் பொன்சேகாவையும் 2015ல் மைத்திரிபால சிறிசேனவினையும் களமிறக்கியது. ரணில் விக்ரமசிங்கவும் அவருடைய சகாக்களும் இணைந்து கட்சியை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளனர்’ என்கின்றார்.

தற்போதைய அரசியல் செயற்பாடுகள் குறித்து…

தற்பொழுது நாம் ‘ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி’ எனும் பெயரில் புதிதாக கட்சியொன்றை பதிவுசெய்துள்ளோம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உபாலி அமரசிறி கட்சியின் தவிசாளராகவும் பொதுச்செயலாளராக நானும் (மைத்ரி குணரத்ன) உள்ளேன். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் அதிரிப்தியுற்றவர்களை இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் காலத்தில் மாநாடொன்றை கூட்டி கட்சியை பகிரங்கப்படுத்த உள்ளோம்.

புதிதாக கட்சியொன்றை பதிவுசெய்தமைக்கான காரணம் என்ன?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்று பெரும்பாலானவர்கள் திருப்திகொள்வதில்லை. கட்சி தொடர்பில் அதிருப்திகொண்டவர்கள் இன்று கட்சியை விட்டும் காணாமல் போயுள்ளனர். 1977இல் ஐதேகா 5ஃ6 பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது. சிறப்பானதொரு வெற்றியின் மூலமே ஐதேகா அதிகாரத்திற்கு வந்தது. இவ்வெற்றியின் மூலம் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்தினார் ஜே.ஆர்.

ஆனால் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இன்று 1/6 ஐயும் விட குறைந்த பலத்துடன் உள்ளது. இன்று அவரது 40 ஆண்டுகால அரசியலைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் கட்சியின் நிலை அந்தோ பரிதாபம்!. கொண்டாடுவதற்கு அங்கு ஒன்றுமில்லை. ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. 1994ல் அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் அவரைக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து சதாவும் நீக்க முடியாத அமைப்பில் ஜனநாயக விரோதமான முறையில் கட்சியின் யாப்பை மாற்றியமைத்தார். அன்று முதல் ஐதேகாவினை விட்டும் ஆதரவாளர்கள் விலகிச்செல்ல ஆரம்பித்தார்கள். அது இன்றும் தொடர்ந்தவண்ணமுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நடப்பதை பாருங்கள். கட்சி ஊழல் மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுவதில்லை என அவர் கட்சிக்குள் இருந்துகொண்டு குரல் எழுப்புகிறார். அவரும் கட்சியை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவா ஜனநாயகம்? கட்சிக்குள் 50வீதமாவது ஜனநாயகம் காணப்பட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவர் பிரதமராக இருப்பது இந்நாட்டின் துரதிஷ்டம். அவர் இருக்கும் வரையில் ஐதேகவுக்கு தலை தூக்க முடியாது. இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் ஐதேவுக்கு வேட்பாளர்களை களமிறக்க முடியாமல் போனது. 2009ல் சரத் பொன்சேகாவையும் 2015ல் மைத்திரிபால சிறிசேனவினையும் களமிறக்கியது. ரணில் விக்ரமசிங்கவும் அவருடைய சகாக்களும் இணைந்து கட்சியை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி என்பது சகல இனங்களையும் ஒன்றிணைக்கும் கட்சி. ஆனால் கிழக்கு மாகாணத்தின் ஐதேகா வாக்குகள் ரவூப் ஹக்கீமுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. மலைநாட்டு வாக்குகள் தொண்டமானுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குத்தகைக்கு வழங்கியே ஐதேகாவை உயிர்ப்பித்து வருகிறார்கள். இதனை நாம் எதிர்க்கின்றோம். ஐதேகாவுக்கென முஸ்லிம் மக்கள் உள்ளார்கள். தமிழ் மக்களும் உள்ளார்கள். அவர்களுடன் பயணிக்க முடியும்.

புதிய தேர்தல் முறைக்கூடாக எவ்வாறு நல்லிணக்கத்தை கட்டியெழுப்பலாம்?

தேர்தல் முறை மாற்றப்பட்டால் இன ஐக்கியம் உருவாகும். காரணம், இன்று ஒரு முஸ்லிம் முஸ்லிம்களின் வாக்குகளின் பின்னால் செல்கிறான். தமிழன், தமிழர்களின் வாக்குகளின் பின்னால் செல்கிறான். சிங்களவன், சிங்கள குல அடிப்படையிலான வாக்குகளின் பின்னால் செல்கிறான். இன்று வாக்குகள் பிரிந்துள்ளன. புதிய முறை ஏற்படுத்தப்பட்டால் ஒரு தொகுதியில் சகல இனமக்களும் காணப்படுகிறார்கள். எனவே தெரிவு செய்யப்படுபவர் எல்லாவற்றையும் சமாளித்துச்செல்லக்கூடியவராகவே உருவாகிறார். 90 வீதம் சிங்களப் பெரும்பான்மையுள்ள பேருவலை ஆசனத்திலிருந்து ஒரு பாக்கிர் மாக்காரை பாராளுமன்றம் அனுப்ப முடியுமாக இருந்தால், பலாங்கொடையில் அபூசாலி எனும் ஒருவரை பாராளுமன்றம் அனுப்ப முடியுமாக இருந்தால் அதை விடவும் ஒரு சகவாழ்வு தேவைப்படுகின்றதா? அவன் முஸ்லிமாக இருப்பினும் எங்களுடைய ஒருவன் என்கின்ற உணர்வு சிங்களவனிடம் இருக்க வேண்டும். சகல இன மக்களும் கூட்டாக இணைந்து விட்டுக்கொடுப்புடனும் சகோதரத்துவ வாஞ்சையுடனும் பணியாற்றக்கூடிய பாதுகாப்பானதொரு எதிர்காலம் எமக்கு இருக்க வேண்டும். இவ்வாறான சகவாழ்வு முறையே தொகுதிவாரி முறையின் கீழ் ஏற்படுத்தப்படுகிறது.

சகல இனவாதக் கட்சிகளையும் ஒதுக்கிவிட வேண்டும். தற்பொழுது இனவாதக் கட்சிகளின் காலம் முடிவடைந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகள் இன்று செல்லுபடியற்றதாகியுள்ளன. இவையெல்லா கட்சிகளும் இன்று தேசிய கொள்கையில் செயற்பட வேண்டும். இனவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொல்ல வேண்டும். சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுக்கு வாக்களிக்குமாறே மக்களை வலியுறுத்த வேண்டும். இனங்களை பிரிக்கின்ற கட்சிகளை நாம் ஒதுக்கி விட வேண்டும்.

1 comment:

Powered by Blogger.