Header Ads



முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காகவும், நாங்கள் குரல் கொடுக்க வேண்டியுள்ளது - சிறீநேசன்

இனவாதங்களையும் மதவாதங்களையும் பேசுபவர்கள் நாகரீகமான மனிதர்களாக இருக்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் மற்றும் முதியோர் சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில், பிரதேச செயலாளர் என்.குணநாதன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

ஒருவரின் உரிமை பறிக்கப்படும்போது தமிழ், சிங்களம், முஸ்லிம் என்றுபார்க்க முடியாது. அதற்காக குரல் கொடுக்க தயங்க மாட்டோம்.

மற்றவர்கள் செய்யும் வேலைகளுக்கு நாங்கள் உரிமை கோர முடியாது. அவ்வாறான வேலைகளை நாங்கள் செய்வதில்லை. சிலர் பொய்யான கருத்துகளையும் தகவல்களையும் இணையத்தளங்கள் ஊடாக பரப்பி வருவதை நாங்கள் காண முடிகின்றது.

அரசியல்வாதிகளுக்கு என்று பணிகள் இருக்கின்றது, நிர்வாகிகளுக்கு என்று பணிகள் இருக்கின்றது. எங்களுக்குரிய பணிகளை நாங்கள் செய்து ஒரு கூட்டுறவாக செயற்படும்போது நாங்கள் அனைத்தையும் வெற்றி கொள்ளக் கூடியதாக இருந்தது.

இந்த நாட்டில் முஸ்லிம் இனம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

இனவாதிகள் மதவாதிகள் என்று நோக்கப்படாமல் நாங்கள் சரியாக நேர்மையாக பணியாற்ற வேண்டும். இனவாதத்தினையும் மதவாதத்தினையும் பேசுகின்றவர்கள் ஒரு நாகரிகமான மனிதர்களாக இருக்க முடியாது.

ஊழல் மோசடிகள் இல்லாமல் பணியாற்றும் எந்த அதிகாரிகளையும் நான் உயர்வாக மதிக்கின்றேன். அவர்களுக்கான மரியாதையினை தாராளமாக வழங்குவதற்கு தயராக இருக்கின்றேன்.

அதேபோன்று லஞ்சம் ஊழல்களைச் செய்து கொண்டு மற்றையவர்களை ஏமாற்றும் வேலைகளை யாராவது செய்வார்களானால் அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.

அதற்காகவே மக்கள் எங்களை தேர்வு செய்துள்ளனர். விலை போகாத அரசியல்வாதிகளாக உள்ளதை உள்ளவாறு பேசும் அரசியல்வாதிகளாகவே நாங்கள் இருந்து வருகின்றோம் என அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.

1 comment:

  1. நான் 80 களை நினைத்துப் பார்க்கிறேன்.
    இந்துக்களுடன் அன்றைக்கு இருந்த உறவின் சுகமான நினைவுகளை....
    யார் யாரோ ஏதேதோ செய்து இத்தனை பெரிய இடைவெளியை உருவாக்கி விட்டனர்.

    ReplyDelete

Powered by Blogger.