Header Ads



முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக, வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர் "சேர் ராசிக் பரீத்"

மர்ஹூம் சேர் ராசிக் பரீத்தின் 33ஆவது நினைவு நாளான இன்றைய தினத்தில் அந்த மகோன்னத மனிதரை நினைவில் கொள்ள நாம் மறப்பதில்லை.

அவர் ஐக்கிய இலங்கைக்காக குரல் எழுப்பிய சமூகத் தலைவராவார்.

இவர் முஸ்லிம் சமூகத்தின் பிதாமகனாகக் கொள்ளப்படுகிறார்.

கொழும்பு மாநகர சபை அரசியல் பிரவேசம் இவரைப் பொது வாழ்வில் இணைத்து கொழும்பு மாநகர சபை உறுப்பினராக, செனட் சபை உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக பிரதி சபாநாயகராக, அமைச்சராக இராஜதந்திரியாக என்றெல்லாம் உயர் பதவிகளை வசிக்கச் செய்தது.

கல்வித்துறை மேம்பாட்டுக்காகவே இவர் செயற்பட்டார். முஸ்லிம் பெண்களின் கல்வி உயர்வில் பெரிதும் நாட்டம் கொண்ட இவர் கொழும்பில் மிகவும் பெறுமதி மிக்க தமது காணிகளை அன்பளிப்பு செய்து முஸ்லிம் மகளிர் கல்லூரி ஸ்தாபிதம் பெற காரணகர்த்தாவாக இருந்தார்.

1946 செப்டம்பரில் 20 மாணவியருடனும், இரு ஆசிரியைகளுடனும் உருவான இக்கல்லுரி இன்று முன்னணி முஸ்லிம் மகளிர் கல்லூரியாக பெருமையுடன் இயங்கி வருகிறது. இதற்கு மூலகர்த்தா சேர் ராஸீக் பரீத்.

முஸ்லிம் பாடசாலை உருவாக்கம், முஸ்லிம் ஆசிரியர் நியமனங்கள் போன்றவற்றிற்கு பெரும் பங்கேற்ற இவர் முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களே நியமிக்கப்படவேண்டுமென பிரேரணை சமர்ப்பித்தார்.

அரபு ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஸ்தாபிதம், இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் உருவாக்கம், பல்கலைக்கழகத்தில் அரபு மொழித்துறை ஆரம்பம் என்றெல்லாம் இவரின் சேவை பங்களிப்புக்கள் பரவலாக அமைந்தன.

அகில இலங்கை சோனகர் சங்கத்தை நிறுவி அதன் தலைவரானார்.

சமுதாய உயர்ச்சியே இவரின் ஒரே கொள்கையாக அமைந்தது.

முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களை மேற்கொள்ள உருவான முஸ்லிம் கவுன்சிலில் தலைவராகவும் இவர் சேவை செய்தார்.

கொழும்பு கோட்டை தலைநகரில் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தை உருவாக்கினார.

தமது வயோதிபப் பருவத்திலும் இந்தத் தலைவர் ஒதுங்கி இருக்கவில்லை. அன்றைய நாட்களில் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடுகளிலும் பங்கேற்று சமுதாயத்தின் நல உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க அவர் தவறவில்லை. நாட்டு மக்களை இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றுபடுமாறே அவர் எப்போதும் வலியுறுத்தினர். அவர் தலைவர் மட்டுமல்ல இலங்கை மாதா ஈன்றெடுத்த ஒரு தவப்புதல்வர்.

சேர் ராசிக் பரீதின் சேவைகள் என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டும்.

-எப். எம். பைரூஸ்- 

No comments

Powered by Blogger.