Header Ads



சிறுபான்மைச் சமூகங்களை, முட்டி மோதச்செய்ய சதித்திட்டம் - ஞானமுத்து ஸ்ரீநேசன்

யுத்தம் முடிவடைந்த பின்னரும் சிறுபான்மைச் சமூகங்களை முட்டி மோதச் செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமகால அரசியலில் முன்னெடுக்கப்பட வேண்டிய தூரநோக்குச் சிந்தனைகள் தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சிறுபான்மைச் சமூகங்களான தமிழரும், முஸ்லிம்களும் ஒற்றுமையாய்ச் செயற்பட்டு உரிமைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக பல சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல்கள் கையாளப்பட்டு வருவதை தூரநோக்குச் சிந்தனையாளர்கள் உற்றுக் கவனித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் சிறுபான்மை இனங்கள் திட்டமிட்டு வேண்டுமென்று சீரழிக்கப்பட்டன. இப்பொழுது யுத்தம் முடிவடைந்த பின்னரும் இவ்விரு சிறுபான்மைச் சமூகங்களையும் முட்டி மோதவிட்டு சீரழித்து சின்னாபின்னமாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இப்பொழுது திடீரென நமக்காகப் பரிந்து பேச எத்தனிக்கும் நபர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஏன் இவ்வளவு ஆர்வமாகவுள்ளார்கள் என்பது பற்றியும் நாம் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.

இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் இலங்கையின் வரலாற்றில் எத்தனையோ ஈடு செய்ய முடியாத இழப்புக்களைச் சந்தித்தவர்கள் என்பதை மனத்தில் இருத்தி எதிர்கால நடவடிக்கைகளை இணக்கப்பாட்டோடு முன்னெடுக்க வேண்டும்.

ஆயுதப்போராட்டச் சக்தி மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் பலமான ஜனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. அந்த சக்தியினை நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவீனப்படுத்துவதற்காக பல கெடுபிடிகளும் நெருக்கடிகளும் தரப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.