Header Ads



முத்தலாக் வழக்கு - உச்சநீதிமன்ற தீர்ப்பு, இன்று வெளியாகிறது

"முத்தலாக்" என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு -22- அளிக்கவுள்ளது.

முஸ்லிம் மதத்தில், மூன்று முறை "தலாக்" எனக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இத்தகைய வழக்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி  ஏழு பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது "முத்தலாக்" என்பது முஸ்லிம் மதத்தினரின் தனிப்பட்ட சட்டம். அரசியலமைப்பு சட்டத்தின்படி தனிப்பட்ட மதம்சார்ந்த சட்டம் என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டதாகும் என்று முஸ்லிம் அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது.

இதேபோல, முஸ்லிம் தனி நபர் சட்டத்தில் தலையிட, நீதிமன்றங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று அனைத்திந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் வாதிட்டது.

எனினும், பெண்களுக்கு எதிரான இந்த நடைமுறை, அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கிறது என்றும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம் மதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளப்படுவது பற்றி நீதிமன்றம் தற்போதைக்கு விசாரிக்காது என்றும் "முத்தலாக்" முறை என்பது முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா? என்பது பற்றி மட்டும் தீர்ப்பு அளிப்போம் என்று அரசியல் சாசன அமர்வு கூறியிருந்தது.

இந்நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி விசாரணை முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் வாழ்க்கை நடைமுறைகளில் ஒன்று முத்தலாக். முத்தலாக் நடைமுறைகளில் நிறைகளை விட குறைகளே அதிகம் நிறைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தை விரிவான கண்ணோட்டத்துடன் பல கோணங்களில் விசாரித்து, விவாதித்து, தீர்க்கமான முடிவை எட்டும் நோக்கில் வெவ்வேறு மதங்களை சார்ந்த நீதிபதிகள் இந்த சட்ட அமர்வில் இடம் பெற்றிருக்கின்றனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், சீக்கிய மதத்தை சேர்ந்தவருமான ஜே.எஸ். கெஹரின் தலைமையில், கிறித்துவ மதத்தை சேர்ந்த நீதிபதி குரியன் ஜோசஃப், பார்சி மதத்தை சேர்ந்த ஆர்.எஃப். நாரிமன், இந்து மதத்தை சார்ந்த யூ.யூ.லலித், இஸ்லாமியரான நஜீர் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முத்தலாக் விவகாரம் தொடர்பான தீர்ப்பை அளிக்கவுள்ளது.

No comments

Powered by Blogger.