Header Ads



உள்ளூராட்சி திருத்த சட்டமூலம், ஜே.வி.பி பாராட்டு

கடந்த கால உள்ளூராட்சி திருத்த சட்டமூலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தச்சட்டமூலம் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடல் மூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி பாராட்டியுள்ளது.

ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் அரசாங்கம் உள்வாங்கியிருப்பதற்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திருத்தச்சட்டமூலம் குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அநுரகுமார திசாநாயக்க இந்தப் பாராட்டை முன்வைத்தார்.

குறித்த திருத்தச்சட்டமூலத்தை செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றினால் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு குழப்பம் ஏற்படாதவாறு தேர்தல்களை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். எனவே காலம் தாழ்த்தாது இத்திருத்தச்சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கலப்பு தேர்தல்முறை கொண்டுவரப்படும்போது வேட்பாளர் ஒருவருக்கு 5000 ரூபா கட்டுப்பணம் செலுத்துவது கடினம். அப்படியாயின் கட்சியொன்று 250 இலட்சம் ரூபாவை செலுத்தவேண்டும். எனவே கட்டுப்பணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தோம்.

வேட்பாளர் ஒருவருக்கு 1500 ரூபா கட்டுப்பணம் அறவிடப்பட வேண்டும் என்ற திருத்தத்தை நாம் முன்வைத்துள்ளோம்.

அத்துடன், உள்ளூராட்சி சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருந்தபோதும் ஒரு தொகுதியில் இருவர் தெரிவுசெய்யப்பட்டால் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக மூவர் தெரிவுசெய்யப்பட்டால் அதில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற திருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போது ஆட்சியில் இருக்கும் கட்சியின் தேவைக்கு ஏற்பவே திருத்தங்கள் செய்யப்பட்டன.

எனினும், முதல் தடவையாக அரசியல் கட்சிகள் அனைத்தினதும் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு திருத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எமது திருத்தங்களையும் உள்வாங்கியமை தொடர்பில் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

No comments

Powered by Blogger.