August 26, 2017

‘மண்ணெண்ணெய் தெளிக்கப்பட்ட சாரைப்பாம்பு’

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு அணியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் தோற்கடிப்போமென ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர்.

மஹிந்த ஆதரவு அணியினர் காரணமில்லாமல் அடுத்தடுத்து கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களிடையே நகைச்சுவைக்கு உள்ளாகியிருக்கும் அதேநேரம் 'நம்பிக்கையில்லா தீர்மானத்தின்' பெறுமதியை வலுவிலக்கச் செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்டது அல்ல. உயர்கல்வியை தனியார்மயப்படுத்தப்படுவதாக அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு அவரது அமைச்சு சம்பந்தப்பட்ட விடயமல்ல என்றும் ஐ.தே.க எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தகவல் திணைக்களத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். இதன்போதே அவர்கள் இக்கருத்தை கூட்டாக முன்வைத்தனர்.

"அரசாங்கத்தில் வேலை செய்யும் அமைச்சர்களுக்கெதிராக பாராளுமன்றத்திலுள்ள திருடர்கள் குழு தொடர்ச்சியாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருகின்றனர். இது நியாயமற்ற செயல். மக்கள் இவ்வாறானவர்களை நிராகரிக்க வேண்டும். எனக்கு நேர்ந்த நிலை ஏனையவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே நான் முன்மாதிரியாக செயற்பட தீர்மானித்துள்ளேன்" என இச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ரவி கருணாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன எந்தவொரு குற்றச் செயலையும் அச்சமின்றி தட்டிக் கேட்க கூடியவர். யார் அவரை எதிர்த்தாலும் எமக்கும் இந்நாட்டு மக்களுக்கும் அவர் மீது பூரண நம்பிக்கையுண்டு என்றும் ரவி கருணாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் பெரும்பங்களிப்பு செய்த அமைச்சர் ராஜிதவுடன் தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். நாட்டையும் நல்லாட்சியையும் கெடுக்க தீயசக்திகள் பெரும் வியூகம் வகுத்து வருகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க ஆளும் கட்சி பெரும் முயற்சி செய்து வரும் நிலையில் அதனை தோற்கடிக்க மஹிந்த ஆதரவு அணியினர் களத்தில் இறங்கியுள்ளனர். இதனால் நாட்டிலுள்ள அனைத்து இனத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த பெண்கள் சமூகமும் மஹிந்த ஆதரவு அணியினரை தொடர்ந்தும் நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலைக் குழப்புவதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பிரதான குறிக்கோளாகும். இதன் மூலம் நாளாந்தம் பொது மக்களின் இலட்சக்கணக்கான பணத்தை அவர்கள் வீணடிப்பதாக முஜிபூர் ரஹ்மான் எம்.பி தெரிவித்தார்.

மஹிந்த ஆதரவு அணியினர் பாராளுமன்றத்துக்கு வருகைதந்த நாளிலிருந்து ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருகின்றனர். அது தற்போது நகைச்சுவைக்குரிய விடயமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

"எதிர்க்கட்சியினரிடையே ஒற்றுமை இல்லை. அவர்களுக்குள் பாரிய கருத்து முரண்பாடு உள்ளது. விமல் வீரவன்ச எம்.பி, ‘மண்ணெண்ணெய் தெளிக்கப்பட்ட சாரைப்பாம்பு’போல் தினமும் பாராளுமன்றத்தில் வந்து விஜயதாச ராஜபக்ஷ எம்.பிக்காக கத்துகின்றார். உண்மையில் விஜயதாச எம்.பிக்கு வாக்களித்த மக்களே சிறிகொத்த முன்பாக கூச்சலிட வேண்டும். அவர்களுக்கில்லாத அக்கறை விமல் வீரவன்ச எம்.பிக்கு வந்துள்ளமை அவர்களுக்கிடையிலிருந்த இரகசிய உறவை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இவர்கள் ஒன்றல்ல பத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தாலும் நாம் அதனை தோற்கடிப்போமென்றும்", முஜிபூர் ரஹ்மான் எம்.பி கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment